“தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது?” – கருணாகரன்

“தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது? எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து இன்று வரை அது சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல. இருந்தாலும் அதைத்தானே தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்! இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டதால்தான் தமிழ்க்காங்கிரஸ் பிழைத்தது. இதை மிகப் பெரிய கெட்டிக்காரரான ஜீ.ஜீ. பொன்னம்பலமே புரிந்து கொண்டு செயற்பட்டார். இதன் விளைவாக உருவானதே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஜீ.ஜீ. பொன்னலம்பலத்துக்கு விளங்கியது குமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. அதனால்தான் அவர்கள் அதிதீவிரமாகச் சிந்திக்கிறார்கள். அதிதீவிரமாகச் சிந்திப்பது பிரச்சினையில்லை. அப்படிச் சிந்திக்கின்ற அளவுக்கு அவர்கள் அதிதீவிரமாகச் செயற்படவும் வேண்டும். ஆனால், அப்படியொன்றும் இல்லை. அப்படியான ஆட்களையே விட்டிட்டு தமிழரசுக் கட்சியை மட்டும் இலக்கு வைத்துத் தாக்குவதன் உள் நோக்கம் என்ன? ஒப்பிட்டளவில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் தமிழரசுக் கட்சியை இணக்கமாகத்தான் பார்க்கிறார்கள். மற்றக் கட்சிகளை விட தமிழரசுக் கட்சியோடுதான் முஸ்லிம்களுடன் உறவும் உண்டு. ஹக்கீமுக்கும் சம்மந்தன் ஐயாவுக்கும் உள்ள அரசியல் உறவையும் நெருக்கத்தையும் உலகமே அறியும். அதைப்போல சிங்களக் கட்சிகளும் அரசியலிலும் அரசியலுக்கு அப்பாலும் தமிழரசுக் கட்சியை ஒரு முக்கியமான தரப்பாகவே பார்க்கிறார்கள். இந்தளவுக்கு வேறு எந்தத் தமிழ்க்கட்சிஇக்கும் ஒரு முக்கியத்துவமும் கிடையாது. இதற்குக் காரணம், தமிழரசுக் கட்சியின் நிதானமான அரசியல் நிலைப்பாடுதான். நீங்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழரசுக் கட்சியோடு காங்கிரஸ் உறவு வைத்திருந்ததால் அது தப்பிப் பிழைத்தது. அதைப்போல இப்பொழுது ரெலோவும் புளொட்டும் உறவு வைத்திருக்கின்றன. அந்த உறவை ரெலோவும் புளொட்டும் கை விட்டால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு நடந்த கதைதான் நடக்கும். ஆகவே தமிழரசுக் கட்சியை ஒதுக்கி விட்டு யாரும் தனித்து நின்று ஜெயிக்க முடியாது. அன்றைய தந்தை செல்வா தொடக்கம் அமிர்தலிங்கம்,  இன்றைய சம்மந்தன் ஐயா வரை அனைவரிடத்திலும் காணப்படும் அரசியல் முதிர்ச்சியும் இதற்குக் காரணம்.  சம்மந்தன் ஐயாவைச் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவரை விட்டால் வேறு யார் நல்ல தலைவர் உண்டு? இதையெல்லாம் புரிந்து கொண்டு கருத்துச் சொல்லுங்கோ….அதுதான் நல்லது….” என்று என்னுடைய கடந்த வாரக் கட்டுரையைப் படித்து விட்டுத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.

“தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்?” எப்படி இருக்கும்? என்ற தலைப்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கான பதிலே அதுவாகும். அந்தக் கட்டுரையில் (கடந்த வாரம் அதைப் படிக்க முடியாதவர்களுக்காக) தமிழரசுக் கட்சின் கடந்த கால, நிகழ்காலத் தவறுகளைப் பேசி, அது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று எழுதியிருந்தேன்.

இப்படி நான் மட்டும் எழுதவில்லை. தமிழரசுக் கட்சியின் இயலாமையைப் பற்றியும் அதனுடைய தவறைப் பற்றியும் பலரும் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார்கள். ஏன் “தந்தையர்களும் தனயர்களும்” என்பது உட்படத் தனியாகப் புத்தகங்களே வந்துள்ளன. பொதுவெளியில் பலரும் பேசி வந்துள்ளனர். இந்த நாட்களில் கூட பலரும் ஆதாரபூர்வமான காரணங்களையும் தகவல்களையும் வைத்து எழுதி வருகிறார்கள்.

ஆனால் இவற்றின் பிரதிபலிப்புகள் தமிழரசுக் கட்சிக்குள்ளும் வெளியிலும் எதிரொலிப்பதில்லை. “விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய்வாய்?” என்று பாரதியார் கேட்டதைப்போலத் துக்கம் பெருக நாமும் கேட்க வேண்டியுள்ளது. அவ்வளவுதான்.

ஆனாலும் நம்மால் இதைப் பேசாமல் இருக்க முடியாது. அது வரலாற்றுக்கும் நம் காலத்துக்கும் நாம் செய்கின்ற துரோகமாகி விடும். மக்கள் மெல்ல மெல்லத்தான் தமிழரசுக் கட்சி பற்றிய மாயையில் இருந்து விடுபடுவார்கள். இனவாதமும் சாதியத்தைப் போன்ற ஒரு தீராநோயே. எளிதில் குணப்படுத்த முடியாதது.

இந்த அடிப்படையில்தான் முன் சொல்லப்பட்ட  தமிழரசுக் கட்சியின் ஆள், தம் பக்கத்தில் உள்ள தவறுகளைப் பற்றிச் சிந்திக்காமல், அதனுடைய பெருமிதங்களைப் பற்றிப் பேசியதும்.

ஆனால், தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவருக்கும் விருப்புக்களும் தெரிவுகளும் இருக்கலாம். அது அவர்களுடைய உரிமையும் சுதந்திரமும் கூட. ஆனால் அந்த விருப்பமும் தெரிவும் பரவலாக நிகழும்போது – திரட்சியடைந்திருக்கும்போது அது ஒரு கூட்டுத் தெரிவாகவும் தீர்மானமாகவும் மாறி விடுகிறது.  அதுவே குறித்த தரப்பின் அரசியல் போக்காகவும் அடையாளமாகவும் மாறி விடுகிறது. இது அந்தத் தரப்பின் (மக்களின்) நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.

இதற்குப் பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தும். எதிர்த்தரப்பின் நடவடிக்கைகள். உரிய கட்சிகளின் கொள்கையும் நடைமுறைகளும். ஊடகங்களின் செயற்பாடும் ஆதரவும், பிரதேச ரீதியாக உள்ள இன, மத, சாதிய, பிரதேச, பால் ரீதியான அறிமுகங்களும் செல்வாக்கும், பிராந்திய, சர்வதேச சக்திகளின் தூண்டல்கள் அல்லது அமுக்கல்கள் எனப் பலவாக இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் அரசியற் பயணத்திலும் இதெல்லாம் உண்டு. சிங்கள அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறையை தமிழரசுக் கட்சி வலுவாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்பொழுதும் அதையே அது பயன்படுத்துகிறது. இதை அந்தக் கட்சியின் 60 ஆண்டுகளுக்கு மேலான பாராளுமன்ற வரலாறே நிரூபிக்கும். வேண்டுமானால் அந்தக் கட்சியைப் பிரதிநித்துவம் செய்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளே சான்று பகரும்.

தொடக்கத்தில் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை மையப்படுத்திப் பேசி வந்த தமிழரசுக் கட்சி, பின்னாளில் தமிழ் – சிங்கள முரண்பாட்டுவாதத்தில் சிக்கி விட்டது. இப்பொழுது அது தமிழ் – சிங்கள மோதலாகவும் சிங்கள வெறுப்புவாதமாகவும் சுருங்கி விட்டது.

ஆகவே தமிழரசுக் கட்சி சுயமாக எதையும் சிந்திப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் சிங்களத் தீவிரவாதத் தரப்பிலிருந்தும் வருகின்ற கருத்துகளுக்கு மறுப்புச் சொல்கின்ற – மறுத்தான் அரசியலையே செய்கிறது. இதைப்பற்றி நாம் பேசினால் அது தமிழரசுக் கட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளப்படுகிறது. தமிழரசுக் கட்சியினருடைய பார்வையில் அது தங்களை மட்டும் இலக்கு வைத்துத் தாக்கியதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

உண்மையில் தமிழரசுக் கட்சி அரசியல் ரீதியாக ஒரு செத்துப் போன பாம்பே. அதனால் எந்தச் சாதனைகளையும் நிகழ்த்த முடியாது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவையும் அவ்வாறானவையே.

தமிழரசுக் கட்சி மீதான விமர்சனம் என்பது அதனுடைய அரசியலை வெவ்வேறு விதமாக முன்னெடுக்கின்ற ஏனைய தரப்புகளுக்கும் பொருந்தும். அவை எதற்கிடையிலும் எந்தப் பெரிய வித்தியாசங்களையும் காண முடியாது. குமுதம் பத்திரிகையில் வருகின்ற ஆறு வித்தியாசங்களில் கூட ஊன்றிக் கவனித்தால் சிறிய வித்தியாசங்களைக் காண முடியும். இவற்றில் நுணுக்குக் காட்டியை வைத்துப் பார்த்தாலும் வேறுபாடுகள் எதையும் காண முடியாது. அத்தனையும் ஒரே அரசியல் வியாபாரக் கம்பனிகளே!

எனவேதான் இந்த வணிகக் கம்பனிகளோடு இந்தியாவும் சர்வதேச சமூகமும் தென்னிலங்கையும் தமக்குத் தோதான வணிகப் பேச்சுகளை தமக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் மேற்கொள்கின்றன. தமக்குத் தேவையான விதத்தில் உறவையும் வைத்துக் கொள்கின்றன.

இதொன்றும் புதினமல்ல. இது பலரும் அறிந்த உண்மை. இனியும் இதுதான் நடக்கப் போகிறது. இதைச் சரியாகச் சொன்னால், இவை தமது மக்களுக்குச் சேவை செய்வதைவிட, தமது மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதை விட, தமது மக்களுடைய நலன்களைக் குறித்துச் சிந்திப்பதை விட பிறருக்கு லாபகரமாகவே சிந்திக்க முற்படுகின்றன.

இதனால்தான் இவற்றினால் தமிழ் மக்கள் எந்த நன்மைகளையும் பெற முடியாதுள்ளது. இனியும் இதுதான் நடக்கும். தமிழ் மக்கள் எவ்வளவு ஆதரவைத் திரண்டு நின்று வழங்கினாலும் அதை ஆற்றில் புளியைக் கரைப்பதைப் போல கரைத்து விடுவர். பதிலாக அந்த ஆதரவைத் தமக்குரிய அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு தமக்கான பேரத்தை மட்டும் பேசி முடித்து விடுவர்.

இதனால்தான் மக்கள் மேலும் மேலும் பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரச்சினைகளின் மேல் பிரச்சினைகள். சுமைகளின் மேல் சுமைகள் எனச் சுமைகாவிகளாகி நிற்கின்றனர்.

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, உடல் உறுப்புகளை இழந்த நிலையிலான பிரச்சினை, உளநிலை பாதிக்கப்பட்ட பிரச்சினை, உறவுகளை இழந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சினை, நிலத்தைப் பறி கொடுத்ததால் சந்தித்துள்ள பிரச்சினை, தொழில் வாய்ப்பையும் வருவாயையும் இழந்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, வளங்களையும் வாழ்நிலையையும் இழந்ததால் உருவாகியுள்ள பிரச்சினை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள்.

தலைவர்களோ இந்தப் பிரச்சினைகளைப் பேசிப் பேசியே தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்றனர். எந்தத் தலைவரும் எந்தப் பிரதிநிதியும் எந்தக் கட்சியும் இந்தப் பிரச்சினைகளில் ஒன்றுக்குக் கூடத் தீர்வைக் கண்டதில்லை. காணவும் மாட்டார்கள். இவர்கள் மக்களோடு சேர்ந்து வாழ்வதேயில்லை. மக்கள் வேறு. தாம் வேறு என்ற பிரிகோட்டினைப் பக்குவமாக வைத்துக் கொண்டே செயற்படுகின்றனர்.

இதனால்தான் இந்த அரசியல், மக்கள் அரசியலாக இல்லாமல் பிரமுகர் அரசியலாக உள்ளது. பிரமுகர் அரசியலில் அடிமைகள்தான் எஞ்சுவர்.

ஆம், தமிழ் மக்களை அரசியல் அடிமைகளாகவே இவை வைத்திருக்கின்றன. இனவாதத்தைப் பரப்பி, அந்த மூட நம்பிக்கைக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றன.

ஒரு பக்கத்தில் சிங்கள இனவாத ஒடுக்குமுறை என்றால், மறுபக்கத்தில் தமிழ் மிதவாத விடுதலையைப் பேசி அதற்கு மாறான அரசியலை மேற்கொண்டு, அடிமை மனோநிலையை வளர்த்துக்கொள்ளும் அடிமை அரசியல் இதுவாகும்.

இதை லேசில் புரிந்து கொள்ள முடியாது. மேலோட்டமாகப் பார்த்தால் சுதந்திரத்துக்கான – விடுதலைக்கான அரசியலாகவே தெரியும். ஆனால், அதன் மறுபக்கம் மிக மோசமான அடிமை நிலைப் பேணுகையாகும்.

இதனால்தான் பாராளுமன்றத்தில் பேசுவது, அங்கே செய்து கொள்ளப்பட்ட சத்தியப் பிரமாணம் போன்றவை ஒன்றாகவும் வெளியே இன்னொன்றாகவும் என இரண்டக நிலை காணப்படுகிறது. இதைப் பற்றி இவர்களில் எவரும் பேசுவதில்லை. கேள்விகள் கேட்பதில்லை.  அப்படி யாரும் கேள்வி எழுப்பினால் உடனே இந்தத் தரப்புகள் பதறி விடுகின்றன. கேள்வி எழுப்புவோரையும் விமர்சிப்போரையும் எதிரிகள், துரோகிகள், சிங்கள அரசின் ஒத்தோடிகள் என்று முத்திரை குத்த முற்படுகின்றன.

 இந்தப் பதட்டம் ஏன்? இந்த முத்திரை குத்துதல்கள் எதற்காக?

இங்கேதான் பிரச்சினையே உள்ளது. இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலே தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் தெரிவித்த கருத்துகளைப் படிப்போருக்கு தமிழரசுக் கட்சியிடம் ஒரு நியாயம் இருப்பதாகத் தெரியும். ஆனால், இவ்வளவு பெருமைக்குரியதாகக் கூறப்படும் தமிழரசுக் கட்சி, அதனுடைய அரசியல் வரலாற்றில் மக்களுக்குச் சேர்த்த நன்மைகள் என்ன? பெறுமதிகள் என்ன? அது மக்களுடைய எத்தகைய துயர்களைத் துடைத்திருக்கிறது? உண்மையாகவே துயர் துடைப்புக் கட்சியாகச் செயற்பட்டிருக்கிறதா? அல்லது துயர் பெருக்குச் சக்தியாக செயற்பட்டிருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழரசுக் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும்  துயர் பெருக்குச் சக்திகளாகவெ உள்ளது தெரியவரும்.  இவை பிரச்சினைகளைக் குறைப்பதை விட பிரச்சினைகளைப் பெருக்கும் தரப்பாகவே உள்ளன.

இதனால்தான் மக்கள் தொடர்ந்தும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தலைவர்கள் பேரோடும் புகழோடும் வாழ முடிகிறது.

என்பதால் மக்களுக்காகக் கட்சியா? கட்சிக்காக மக்களா? என்ற இலகுவான கேள்வியை எழுப்பி அந்தத் தமிழரசுக் கட்சி உறுப்பினரைப் பின்வாங்க வைத்தேன். இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில –

1.    விடுதலைப்புலிகள் கூட்டமைப்பை உருவாக்கி, பெண் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முன்பு, தமிழரசுக் கட்சி பெண் உறுப்பினர்கள் எவருக்கேனும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ வாய்ப்பை வழங்கியிருக்கிறதா?

2.    70 ஆண்டுகால தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இப்பொழுது கூடப் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய சாத்தியமுண்டா?

3.    சாதி ரீதியாகப் பிளவுண்டிருக்கும் சமூகத்தில் சாதிய அணுகுமுறையைப் பராமரித்துக் கொண்டே தமிழரசுக் கட்சி செயற்படுகிறது. இதை ஒழிக்க வேண்டும். அனைவருக்கும் சமநீதி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சமூக நீதியுடன் சமத்துவமாகச் செயற்படுவதற்கு அது தயாரா?

4.    வடக்குக் கிழக்கில் பெருவாரியான மலையக மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கான மரியாதையை, அந்தஸ்தை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழரசுக் கட்சி வழங்கியுள்ளதா?

5.    இனவாத அரசியலை முறியடிப்பதற்கான தமிழரசுக் கட்சியின் மூலோபாயம் என்ன? தந்திரோபாயம் என்ன?

6.    பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தமிழரசுக் கட்சி கொண்டிருக்கும் அரசியல், ராசதந்திர உறவுகள் எத்தகையன?

7.    ஜனநாயகம் பற்றிய தமிழரசுக் கட்சியுனுடைய புரிதல் என்ன? அதனுடைய ஜனநாயக நிலைப்பாடு எத்தகையது? மெய்யாகவே அது ஜனநாயக உறுதிப்பாட்டில் இருக்குமானால் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடன் ஜனநாயக ரீதியாக ஏன் அணுகமுடியவில்லை?

8.    அந்த ஜனநாயக அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியற்கட்சியாகப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்?

இப்படிப் பல கேள்விகள். அவரோ பதிலளிக்காமல், “நீங்கள் எப்பவும் இப்படித்தான். தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கப் பார்ப்பீர்கள்” என்று ஒற்றைச் சொல்லில் குற்றம் சாட்டினார்.

இந்தக் கேவலத்தை என்னவென்று சொல்வது?

ஒரு சிறந்த அரசியல் சக்தி எனப்படுவது மக்களுடைய வரலாற்றில் பன்முகத்தன்மையான பெறுமதிகளைச் சேர்க்க வேண்டும். ஜனநாயக ரீதியாக, உரிமைகள் வழியாக, பண்பாட்டு ரீதியாக, பொருளாதார மேம்பாட்டின் மூலமாக, அறவியல், அறிவியல் ரீதியாக என இந்தப் பெறுமதிகள் அமைய வேண்டும். தமிழ்க் கட்சிகள் எதனிடத்திலும் இத்தகைய அடிப்படைகள் ஏதுமுண்டா?

என்பதால்தான் தமிழ் மக்களின் அரசியலும் வாழ்க்கையும் ஒரு அடி கூட முன்னே நகர முடியாமல், பல இடிகள் பின்னே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக்குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். மக்களுடைய சிந்தனையே மக்களுக்கான விடுதலையைத் தரும். அதுவே மாற்றத்துக்கான வழிக்கு ஒளியூட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்