தபால் மூல வாக்களிப்பு இன்று முதல்!

இம்முறை பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது.

இதனடிப்படையில், இன்று அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ராஜாங்கனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தபால் மூல வாக்களிப்பு மாத்திரம் பிற்போடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுதினம், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் , விவசாய – கல்வி காரியாலயங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் வாக்களிக்க முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காராணமாக சுய தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டோரில் அரச ஊழியர்களும் உள்ளடங்குவதால் தபால் மூல வாக்களிப்பில் சற்று சிக்கல் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சிக்கலுக்கும் தீர்வை வழங்கும் வகையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மாற்று யோசனைகள் காணப்படுவதாகவும் அவற்றை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுய தனிமைப்படுத்தலில் உள்ள தபால்மூல வாக்காளர்கள், மாலை 4 மணி தொடக்கம் 05 மணி வரையான காலப்பகுதியில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தபால்மூல வாக்களிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுமார் ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முகநூலில் நாம்