
இயக்குநர் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவாக மிரட்டிய நடிகர் அரவிந்த்சாமி இடம்பெறுவாரா? இல்லையா? என்பது குறித்து ரசிகர்களிடம் பெரும் ஆவல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பட குழுவினரிடம் கேட்டபோது, ”முதல் பாகத்தில் வித்தியாசமான வில்லனாக வந்து நடிப்பில் அசத்திய அரவிந்த்சாமி கதாபாத்திரம் உச்சகட்ட காட்சியில் இறந்திருந்தாலும் இரண்டாம் பாகத்தில் அவர் தொடர்பான காட்சிகள் உண்டு.
அவை சிறிய அளவில் இடம்பெறுவதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்” என்றனர்.
‘தனி ஒருவன் 2’ படத்தில் வில்லனாக நடிப்பது நட்சத்திர நடிகராக இருந்தாலும் சித்தார்த் அபிமன்யு எனும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிப்பது உறுதி என தெரிய வருவதால் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.