தங்கைக்காக தன் உயிரைக் கூட துச்சமாக எண்ணி களத்தில் இறங்கிய பாசத் தமையன்!

அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய ஆறு வயதுச் சிறுவனைப் பற்றிய பதிவு வைரலாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதியன்று அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்து, உடனடியாக முன்னால் பாய்ந்து தடுத்துள்ளார். இதனால் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும், தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியுள்ளார்.

இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் இதுபற்றி பதிவிட்டுள்ளார்.

“என் சகோதரரின் மகன் ஒரு நாயகன். தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். அவனே முன்னால் வந்து நின்று தங்கையைப் பாதுகாக்க நாயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான். இதுபற்றிக் கேட்டபோது, ‘அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்று இருந்திருந்தால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்’ என்று சொன்னான். நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.

அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மற்ற நாயகர்களிடம் இந்தத் தகவலைச் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்குத் துணையாக இன்னொரு நாயகன் வந்திருக்கிறான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது அவர்கள்வரை செல்லுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்”. என்று மிகவும் நெகிழ்ச்சிபூர்வமாக இந்த சம்பவம் பற்றி சொல்லியிருக்கிறார் பிரிட்ஜரின் அத்தை.

முகநூலில் நாம்