டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாது – ஷேவாக்

ஆமதாபாத்தில், புதிய விளையாட்டு உபகரணங்கள் கடை ஒன்றை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை மூத்த வீரரான விக்கெட் கீப்பர் டோனி ஐ.பி.எல். மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு, மாற்று வீரரை அடையாளம் காணும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினம்.

ஒருவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடினாலும் கூட, தற்போதைய இந்திய அணியில் யாருக்கு பதிலாக அவரை சேர்ப்பார்கள்? லோகேஷ் ராகுல், விக்கெட் கீப்பிங் பணியோடு மிக அற்புதமாக விளையாடி வருகிறார். எனவே அவருக்கு பதிலா டோனி என்பது சாத்தியமில்லை. இதே போல் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கும் மாற்ற வீரராகவும் அவரை நினைக்க முடியாது.

இந்திய கேப்டன் விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து கேட்கிறீர்கள். விராட் கோலி நம்மை போன்று மனிதர் தான். அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. நீண்ட காலமாக அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இங்கிலாந்து மண்ணில் (2014-ம் ஆண்டு) நடந்த டெஸ்ட் தொடரிலும் சமீபத்தில் நியூசிலாந்து தொடரிலும் அவர் ரன் குவிக்காமல் தடுமாறினார். இது எல்லோருக்கும் நடக்கக்கூடியது தான். ஜாம்பவான்கள் ரிக்கிபாண்டிங், ஸ்டீவ் வாக் போன்றவர்களும் இது போன்று குறிப்பிட்ட காலம் சோடை போனது உண்டு. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடக்கும் போதோ அல்லது ஐ.பி.எல். போட்டியின் போதோ அவர் நிச்சயம் பார்முக்கு வந்து விடுவார். அவரது பேட்டிங் தொழில்நுட்பத்திலோ, மனஉறுதி அல்லது அணுகுமுறையிலோ எந்த தவறும் இருப்பது போல் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கேட்கிறீர்கள். சூப்பர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா திரும்ப இருப்பது, இந்தியாவுக்கு மேலும் வலு சேர்க்கும். அவரது வருகை அணி சரியான கலவையில் அமைவதற்கு உதவுகிறது.

அதே சமயம் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு என்று உறுதியாக சொல்ல முடியாது. இதில் தனிப்பட்ட வீரர் கூட அபாரமாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றி விட முடியும்.இவ்வாறு ஷேவாக் கூறினார்.

38 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்