டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது பஞ்சாப்ஷிகர் தவான் சாதனை

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் ரிஷப் பன்ட், ஹெட்மயர், டேனியல் சாம்ஸ் இடம் பெற்றனர். பஞ்சாப் அணியில் கிறிஸ் ஜார்டனுக்கு பதிலாக ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். பார்மில் இல்லாத ஷா 7 ரன் மட்டுமே எடுத்து நீஷம் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் இணைந்தார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 14 ரன் எடுத்து முருகன் அஷ்வின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய தவான் 28 பந்தில் அரை சதம் அடித்தார். ரிஷப் பன்ட் 14 ரன் எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் அகர்வாலிடம் பிடிபட, டெல்லி அணி 106 ரன்னுக்கு 3வது விக்கெட்டை இழந்து சற்றே தடுமாறியது. ஸ்டாய்னிஸ் 9 ரன் எடுத்து ஷமி வேகத்தில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தவான் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 101* ரன் விளாசி இருந்த தவான், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 2வது விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஹெட்மயர் 10 ரன் எடுத்து ஷமி வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிளீன் போல்டாக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. தவான் 106 ரன்னுடன் (61 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி 2, மேக்ஸ்வெல், நீஷம், எம்.அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களான ராகுல் 15 ரன் எடுத்து (11 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர்) சாம் பந்து வீச்சில் பாட்டீலிடம் கேட்ச் கொடுத்தார். அகர்வால் 5 ரன்களுடன் ரன் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய கிறிஸ் கெயில் 29 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்ஸர்), பூரன் 53 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு விளையாடிய மேக்ஸ்வெல் 32, ஹூடா 15, நீஷம் 10 ரன்களும் எடுத்தனர். டெல்லி பந்து வீச்சில் ரபாடா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து, 167 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தி வெற்றி பெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்