டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் தொடருக்கு பின்னர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் தொடருக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

40 வயதான செரீனா வில்லியம்ஸ் ,  23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார். 

இவர் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க ஓபன் தொடருக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்ற பிறகு தனது வாழ்க்கையில் முக்கியமான பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார் செரீனா. இந்த ஆண்டு அமெரிக்க ஓபனை வெல்ல முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார்.

ஓய்வு முடிவு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல முடிவு செய்ய வேண்டிய நேரம் வரும். நீங்கள் எதையாவது அதிகமாக நேசிக்கும்போது அதை விட்டு விலகும் நேரம் எப்போதும் கடினமாக இருக்கும். நான் டென்னிஸை ரசிக்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கான நேரம் நெருங்கியுள்ளது.

நான் ஒரு அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.

நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை பரிணாமம். நான் டென்னிஸிலிருந்து விலகி, எனக்கு முக்கியமான ஏனைய விஷயங்களை நோக்கிப் பரிணமித்து வருகிறேன். 

சில வருடங்களுக்கு முன்பு நான் செரீனா வென்ச்சர்ஸ் என்ற மூலதன நிறுவனத்தை தொடங்கினேன். அதன் பிறகு நான் ஒரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் அந்த குடும்பத்தை வளர்க்க விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்