டி20 உலக கோப்பையை தள்ளிவைக்க பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று முடிவு செய்கிறது.

ஐ.சி.சி.-யின் போர்டு நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகல் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 2 ஆண்டுக்கு இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி காணொலியில் பங்கேற்கிறார். ஐ.சி.சி. தலைவர் ‌ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைக்க பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைக்க பாகிஸ்தான் ஆதரவு கொடுக்காது. தற்போது மே மாதம் என்பதால் இன்னும் போதுமான காலம் இருக்கிறது. கொரோனா தொற்று குறித்து ஐ.சி.சி. உறுப்பினர்கள் இன்னும் காத்திருக்கலாம்.

இரண்டு மாதத்திற்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கலாம். தற்போது அவசரப்பட தேவையில்லை. 20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைப்பதை பாகிஸ்தான் எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் சார்பில் ஈஷான் மணி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்கிறார்

இந்தப் போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருக்கிறது. பெரும்பாலான வீரர்களின் மனநிலையும் இதே மாதிரியே இருக்கிறது.

முகநூலில் நாம்