
இலங்கை பாடசலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் டயலொக் ஜனாதிபதி கிண்ண றக்பி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக இஸிபத்தன கல்லூரி தகுதிபெற்றது.
ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (2) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் சென் தோமஸ் அணியை 29 (4 ட்ரைகள், 3 கொன்வேர்ஷன்கள், ஒரு பெனல்டி) – 13 (ஒரு ட்ரை, ஒரு கொனவேர்ஷன், 2 பெனல்டிகள்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் இஸிபத்தன இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இந்த வருட பாடசாலைகள் றக்பி போட்டியில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான இஸிபத்தன இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இடைவேளையின்போது 26 – 6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்கு முன்னர் இஸிபத்தன சார்பாக 3 ட்ரைகள், 2 கொன்வேர்ஷன்கள், ஒரு பெனல்டி மூலம் புள்ளிகள் பெறப்பட்டதுடன் சென். தோமஸ் சார்பாக 2 பெனல்டிள் மூலம் புள்ளிகள் பெறப்பட்டது.
இடைவேளையின் பின்னர் 41ஆவது நிமிடத்தில் புளத்சிங்களகேவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால் சென். தோமஸ் அணி 14 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட இஸிபத்தன மேலும் ஒரு ட்ரையை வைத்தது.
எனினும் இடைவேளையின் பின்னர் ஆட்டத்தில் போதிய விறுவிறுப்பு காணப்படவில்லை.
போட்டியின் 61ஆவது நிமிடத்தில் சென் தோமஸ் ட்ரை வைத்தபோதிலும் அதன் பின்னர் இஸிபத்தன திறமையாக விளையாடி வெற்றியை உறுதிசெய்துகொண்டது.
இஸிபத்தன சார்பாக ரினேஷ் சில்வா (2 ட்ரைகள்), சூரிய தொடங்கொட (1 ட்ரை), பிரவீன் ஸ்டீவன் (1 ட்ரை) மலித் மிஹிசர (3 கொன்வேர்ஷன்கள், 1 பெனல்டி) ஆகியோரும்
சென் தோமஸ் சார்பாக எம். ஹக்கீம் (ட்ரை), யெஹான் புளத்சிங்களகே (ஒரு கொன்வேர்ஷன், 2 பெனல்டிகள்) ஆகியோரும் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.