ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத்தலைவர் கோஜோ தஷிமா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

வடக்கு அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்டில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளன போர்டுவின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு பயணித்த தஷிமா, பின்னர் மார்ச் 2-ந்தேதி நெதர்லாந்துக்கு சென்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அமெரிக்கா சென்ற அவர் அங்கிருந்து 8-ந்தேதி தாயகம் திரும்பினார். இப்போது கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்தும் நோக்குடன் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போது எந்த விதமான கடினமான முடிவும் (தள்ளி வைப்பு அல்லது ரத்து) எடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்