ஜனாதிபதி தலைமையில் மீண்டும் கூடவுள்ள கொரோனா தடுப்பு செயலணி

கொரோனா தொற்றுறுதியான மேலும் 18 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் கொரோனா தொற்றுறுதியான 332 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்.

அதேநேரம், இலங்கையில் ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட்-19 நோயாளர்கள் 21 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் கூடவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாசா தெரிவித்தார்.

இதேவேளை கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 10பேர் பலியாகினர்.

நேற்றையதினம் பயாகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர், திருகோணமலை – மங்கி ப்ரிஜ் தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்தநிலையில், அவரது சடலம் நேற்று இரவு 10 மணி அளவில் தகுந்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து மீள அழைத்து வரப்பட்ட இலங்கையர்களில் 157 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இது குறித்து எமது செய்திப் பிரிவு வினவிய போதே இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

அவர்களில் 90 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என அவர் கூறியுள்ளார்.

அவர்களில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனையோர் மலேஷியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்