ஜனாதிபதி சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

04 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலா கைத்தொழில், மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகையில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமை காரணமாக மீண்டும் அது வீழ்ச்சி அடைந்துள்ளது. சுற்றுலாத் துறையானது தேசிய பொருளாதாரத்தைப் போன்று, பெருமளவிலான மக்களின் தொழில் பாதுகாப்புக்கு தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு முக்கியமான துறையாக இருப்பதால், அது துரிதமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாடு பற்றிய தவறான கருத்து பிரச்சாரங்களை தூதரகங்கள் மூலம் சரி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுகின்றவர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

திரைப்பட படப்பிடிப்பு அமைவிடங்களை கவர்ச்சிகரமான முறையில் உலகம் பூராகவும் விளம்பரப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு அதிக கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்