ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மைத்திரி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஏதேனும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

அந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார் என்ற போதிலும் , எந்தவொரு பதவிகளையும் ஏற்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகளின் முன்னணியினருக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போதுள்ள எந்த நெருக்கடிகளும் எனது ஆட்சி காலத்தில் காணப்படவில்லை. எனது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஒரேயொரு கவலைக்குரிய விடயம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களாகும்.

அது குறித்து முன்னரே எனக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தால் , தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுத்திருப்பேன். இந்த தாக்குதல்களால் பயங்கரவாதிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவினால் கூட ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தாக்குதல்களை தடுக்க முடியாமல் போயிற்று.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஏதேனும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவரது முயற்சிகளுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம். ஆனால் எவ்வித பதவிகளையும் ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. பதவிகள் எமக்கு முக்கியமானதன்று.

எமது நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெறாவிட்டாலும் , வெளிநாட்டு யுத்தங்கள் எமது பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன. ரஷ்ய – உக்ரைன் யுத்தம் தொடரும் வரையில் எரிபொருள் நெருக்கடிகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறிருப்பினும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்