சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15 ஆயிரம்
வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதி செயலகத்தில்
கையளித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனவரி 23 ஆம் திகதி
ஆரம்பிக்கும் வாரம் கறுப்பு வாரமாக பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளதாகவும்
தெரிவித்தது.
சங்கத்தினால் குறித்த மகஜர், புதன்கிழமை (11) ஜனாதிபதி செயலத்தில்
கையளிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப்
பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க அனைத்து மாகாணங்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டதாக
குறிப்பிட்டார்.
புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக வைத்தியர்கள், வல்லுநர்கள் மற்றும்
பல சங்கங்கள் ஏற்கெனவே போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தற்போதைய
வரித் திருத்தங்களை இரத்து செய்து, அனைவருக்கும் நியாயமான வரிக் கொள்கையை
முன்வைக்குமாறு சங்கம் அதிகாரிகளிடம் கோருகிறது என்றும் அவர்
தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளுக்கு எதிராக பாரிய அளவிலான
எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் ஜனவரி 23 ஆம் திகதி
ஆரம்பிக்கும் வாரம் கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்
சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.