
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27-ம் தேதி இத்தாலியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்ததாகக் காங்கிரஸ் கட்சி இப்போது தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 27-ம் தேதி சனிக்கிழமை அன்று சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.