
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது தொடர்பாக கருத்து ஒற்றுமை எட்டப்பட்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூத் சாவு ஷோக்லு தெரிவித்துள்ளார்.
ஆயினும் முகமது பின் சல்மானின் இந்த பயணம் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
“செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் இந்த மாதம் நடக்க உள்ளது. இது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது,” என்று துருக்கி அரசு ஊடகத்திடம் சாவுஷோக்லு கூறினார்.
இளவரசரின் பயண தேதியை தீர்மானிக்க செளதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனைகளை தான் நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர, செளதி அரேபியாவுடனான இறுக்கமான உறவுகளை இயல்பாக்குவதற்கு துருக்கி செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.