செய்த குற்றத்தை மறைக்கவே ஊடகவியலாளர் மீது தாக்குதல்

நேற்று முன்தினம்(9) கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தின் போது, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கதும் மிலேச்சத்தனமானதும் தகவல்கள் தெரிந்து கொள்வதை தடுத்து நிறுத்துவதுமான ஒரு செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நடக்கின்ற சம்பவங்களை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்கின்ற பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றுகின்றவர்கள்.

அவர்களுடைய கடமைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். ஏனெனில் ஊடகவியலாளர்களை தாக்குவது என்பது தாக்கல் செய்கின்ற தவறுகள் வெளியில் தெரிந்துவிடும் அல்லது சர்வதேசத்தில் இந்த நாட்டிற்கு அவப்பெயர் வந்துவிடும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் தாக்கப்படுகின்றார்கள்.

ஆனால் கடமையில் இருக்கின்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் தங்களுடைய கடமைகைளை சரியாக செய்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அவர்கள் தங்களுடைய கடமைகளை மறந்து சட்டத்தை கையில் எடுக்கின்ற போதே, தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன.

இலங்கையில் ராஜபக்சக்கள் என்று ஆட்சிக்கு வந்தாலும் ஊடகவியலார்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.வெறுமனே கண்துடைப்பிற்காக பதவி நீக்கம் செய்வதோ இடமாற்றம் வழங்குவதோ சரியான தீர்வாக அமையாது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் இனம் காணப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனையை நீதிமன்றம் ஊடாக வழங்க வேண்டும்.அதற்காக சட்டத்தரணிகள் அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்