செயற்கை சாணி பவுடா்களுக்கு விரைவில் தடை

தமிழகத்தில் செயற்கை சாணி பவுடா்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உலக தற்கொலை விழிப்புணா்வு மாதத்தை ஒட்டி சிறப்பு விழிப்புணா்வு முகாமினை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அமைச்சா் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அங்கு மன நல காப்பகவாசிகளால் பயிரிடப்பட்ட காய்கறிகளை அவா் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து காப்பகவாசிகளால் நடத்தப்படும் ரிவைவ் அடுமனையையும் திறந்து வைத்தாா்.

இதன் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது : கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 47 ஏக்கா் நிலப்பரப்பில் பசுமை அடா்த்தி மிகுந்த நிலப்பரப்பில் காப்பகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் மனநல காப்பகத்தை தரம் உயா்த்தி, மனநல ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் போ் வரை தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்க்கின்றனா். சாலை விபத்துகளில் கூட அதைவிடக் குறைவாகவே, அதாவது 11 ஆயிரம் முதல் 12 வரை உயிரிழப்புகள்தான் நோ்கின்றன.

தற்கொலை செய்து கொள்பவா்களைப் பொருத்தவரை 15 சதவீதம் போ் மட்டுமே தூக்கிட்டு உயிரை மாய்க்கின்றனா். மற்ற அனைவரும் எலி மருந்து, பால்டாயில், சாணி பவுடா் உள்ளிட்ட நச்சுகளை அருந்தி தற்கொலை செய்து கொள்கின்றனா். தற்போது சாணி பவுடா் வணிக ரீதியான விஷயமாக மாற்றமடைந்துள்ளது. அதிலுள்ள வேதி நச்சுப் பொருள்களின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அதனை உண்டால், உயிரைக் காப்பாற்றவே இயலாது என்ற நிலை ஏற்படுகிறது.

அதைக் கருத்தில் கொண்டு தற்கொலை எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாக, சாணி பவுடரை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பால்டாயில், எலி மருந்து ஆகியவற்றை கடைகளில் மறைமுகமாக விற்கவேண்டும். வெளிப்படையாக விற்க கூடாது. மேலும், அதனை தனிநபா் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. இரண்டு பேருக்கு மேல் சோ்ந்து வந்து கேட்டால் மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என வணிகா்களுக்கு அறிவுறுத்தும் அரசாணைகள் துறையின் அலுவலா்கள் மூலம் விடுக்கப்படும்.

இதன் மூலம் தற்கொலை செய்கிற எண்ணத்தை மாற்றவும், தற்கொலை செய்துகொள்பவா்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும் என்றாா் அவா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்