
ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே, செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டே கொலைசெய்யப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் சூத்திரதாரி என்று மேற்கு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் ஃபக்ரிசாதே, கடந்த மாதம் 27ஆம் திகதி தெஹ்ரான் அருகே ஒரு அருகிலுள்ள அப்சார்ட் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் இந்த தாக்குதலை, ஈரானின் மதகுரு மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள், இஸ்லாமிய குடியரசின் நீண்டகால எதிரியான இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், இதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
எனினும் 2010ஆம் ஆண்டு முதல் பல ஈரானிய அணு விஞ்ஞானிகளை, இஸ்ரேல் கொன்றதாக ஈரான் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியது.
இந்தநிலையில் இதுகுறித்து ஈரானின் புரட்சிப் படையின் துணை தளபதி கூறுகையில், ‘செயற்கைக் கோள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இயந்திரத் துப்பாக்கியால், ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலம் இந்த படுகொலை நடந்ததுள்ளது.
இந்த இயந்திரத் துப்பாக்கி, மொசென் ஃப்ரிஸாதேவின் முகத்தை மட்டுமே குறிவைத்து சுமார் 13 சுற்றுகள் சுட்டுள்ளது. அவருக்கு அருகிலேயே 25 செ.மீ. தொலைவில் அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு சிறு காயமும் ஏற்படவில்லை’ என கூறினார்.
வீதியில் ஃப்ரிஸாதேவின் கார் சென்று கொண்டிருந்தபோது, மரங்களை ஏற்றி வந்த ஒரு லொரி அந்தக் கார் அருகே வந்தது. அப்போது, அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடிக்கச் செய்யப்பட்டது.
இதனால் மோசென் ஃபக்ரிஸாதே சென்ற கார் நின்றுபோனது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சுமார் 5 பேர், ஃபக்ரிஸாதேவின் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்களுக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், தாக்குதல் நடத்திய 3 பேர் கொல்லப்பட்டதாகவும் சில பாதுகாவலர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த ஃபக்ரிஸாதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.