சூர்யாவின் திரைப்பட ரிலீஸ் திகதிகள் தள்ளிப்போகுது  

தான் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருந்த “சூரரைப் போற்று” படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

சூர்யா கதாநாயகனாக நடிக்க, சுதா கொங்குரா இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் சூரரைப் போற்று. சூர்யா தவிர, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படம் அமெஸான் பிரைமில் அக்டோபர் 30ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அறிவித்தபடி இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூரரைப் போற்று படத்தைத் துவங்கும்போது, சில சவால் இருக்குமென நினைத்தோம். அதாவது, இதுவரை படம்பிடிக்கப்படாத பகுதிகளில் படத்தை எடுப்பதாலும் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களோடும் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களோடு பணியாற்றுவதாலும் ஏற்படும் சவால்கள் அவை.

இந்தப் படம் விமானப்படை பற்றியது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே நாங்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி, அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இந்திய விமானப் படையின் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது.

தற்போது புதிதாகச் சில தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டியுள்ளது. ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் தேசத்தின் முன்னுரிமை வெவ்வேறு விஷயங்களின் மீது குவிந்துள்ளதால் நாங்கள் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

சூரரைப் போற்று நம் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். துரதிருஷ்டவசமாக இந்த படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்திருக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதற்காக எவ்வளவு காத்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதனை நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

விரைவிலேயே இந்தப் படத்தின் ட்ரைலரை வெளியிடுவோம்” என்று நடிகர் சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

விமானத் துறை தொடர்பான படம் என்பதால், சில அனுமதிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், அதனை தற்போது சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுரை, சென்னை, சண்டீகர் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், படப்பிடிப்பிற்குப் பிந்தைய பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. அதன் பிறகும், படத்தின் வெளியீடு தாமதமடைந்து கொண்டே போனது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று, சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்