
சுவிட்சர்லாந்தின் பேர்ன் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற சைட்டஸ் மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தேசிய சம்பியன் சுமேத ரணசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். முதலாவது முயற்சியில் 74.55 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை சுமேத எறிந்தமையே அவரது அதிசிறந்த தூரப் பெறுதியாக அமைந்துடன் அத் தூரப் பெறுதியே வெண்கலப் பதக்தையும் பெற்றுக்கொடுத்தது.
2ஆவது, 3ஆவது முயற்சிகளில் அவரது தூரப் பெறுதிகள் முறையே 74.07 மீற்றர், 70.11 மீற்றர் என பதிவானது. சுமேதவின் 4ஆவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. 5ஆவது முயற்சிக்கு அவர் விடுகை கொடுத்தார். 6ஆவது முயற்சியில் அவரால் 73.25 மீற்றர் தூத்துக்கு ஈட்டியை எறியக்கூடியதாக இருந்தது.
சைட்டஸ் மெய்வல்லுநர் போட்டி, உலக மெய்வல்லுநர் நிறுவனத்தின் கண்டங்கள் சுற்றுப்பயண வெண்கல போட்டியாகும். இதன் கராணமாக சுமேதவுக்கு 42 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும். அப் போட்டியில் லத்வியா வீரர் ரோலண்ட்ஸ் ஸ்ட்ரோபைண்டர்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றார். முதலாவது முயற்சியில் அவர் எறிந்த 78.72 மீற்றர் தூரமே அவருக்கு தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தது. பிரான்ஸ் வீரர் சோசய்யா பெலிஸ் வாஹய் (76.52 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் 6.33 மீற்றர் தூரம் பாய்ந்து பெண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற சாரங்கி சில்வாவுக்கு பேர்ன் போட்டியில் 4ஆம் இடமே கிடைத்தது.
பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வாவினால் 6.19 மீறறர் தூரத்தையே பாய முடிந்தது. ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே (46.36 செக்.) 6ஆம் இடத்தையும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்ன (2:04.48) 6ஆம் இடத்தையும் பெற்றனர்.