சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கான காரணம் தீர்க்கப்படாமல் உள்ளது

75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு
அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என
தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு
சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை
இலங்கை கண்டடைவதை உறுதி செய்ய வேண்டும் என பிரிட்டன் அரசாங்கத்திடமும்
சர்வதேச சமூகத்திடமும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரிட்டன் வாழ் தமிழர்களை உள்ளடக்கிய
தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினால்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில்
நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை மற்றும் தமிழ் மக்களால்
ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வினை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை
முன்னிறுத்தி தமிழர்கள் ஆதீனத்தை புறக்கணித்துள்ளதாக
சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான சம்பவங்கள், காணி அபகரிப்பு
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு
கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்னமும் தொடர்வதாகவும்
அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நியாயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்தி, ஸ்திரத்தன்மை மற்றும்
சுபீட்சத்தை நோக்கிய பாதையில் நாட்டை முன்னகர்த்திச் செல்லக்கூடியவாறாக
இலங்கையின் அரச கட்டமைப்பு மாற்றமடைய வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்