சீரற்ற காலநிலையால் 11 000 பேர் பாதிப்பு – மூவர் பலி : நால்வர் மாயம் – 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 7 மாவட்டங்களில் 2911 குடும்பங்களைச் சேர்ந்த 11 821 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை (2) மாலை வரை 3 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு , வெள்ளத்தில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளனர்.

அத்தோடு குறித்த மாவட்டங்களில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு , 257 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 461 குடும்பங்களைச் சேர்ந்த 2218 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கொடகவெல, எலபாத, நிவித்திகல, கலவான, அயாகம, கஹவத்த, வெலிகபொல, இரத்தினபுரி, பலாங்கொட, பெல்மடுல்ல மற்றும் கொலன்னா ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 1666 குடும்பங்களைச் சேர்ந்த 6495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 174 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு , 80 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் :பததும்பர, யட்டிநுவர, ஹதரலியத்த, ஹரிஸ்பத்துவ, தும்பனை, பதஹேவாஹட, கங்கவத்தகோரளை, தெல்தோட்டை, மெததும்பர, உடபலாத்த மற்றும் பஸ்பாக கோரள ஆகிய பிரதேச செயலகங்களில் 837 குடும்பங்களைச் சேர்ந்த 3809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார். இம்மாவட்டத்தில் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு , 323 குடும்பங்களைச் சேர்ந்த 1595 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

நுவரெலியா மாவட்டத்தில் : கொத்மலை, அம்பகமுவ, நுவரெலியா மற்றும் அங்குராங்கெத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் மண் சரிவு, மரம் முறிந்து விழுந்தமை, வெள்ளம் மற்றும் பலத்த காற்றினால் 320 குடும்பங்களைச் சேர்ந்த 1224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு , மூவர் காணாமல் போயுள்ளனர். அத்தோடு ஓரு வீடு முழுமையாகவும் , 41 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இங்குள்ள 58 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில்: யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, கேகாலை மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப்பிரிவுகளில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

அம்பாந்தோட்டையில்: ஒகேவெல மற்றும் வலஸ்முல்ல பிரதேச செயலகப்பிரிவுகளில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

காலி மாவட்டத்தில் :மதம்பாகம மற்றும் கடவத்சத்ர ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் கற்பாறை சரிந்து விழுந்தமை மற்றும் மண் சரிவினால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , இரு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழப்பாணத்தில் பலத்த காற்று காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இந்த குடுபத்தினர் வசித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நாவலப்பிட்டி – கெட்டபுலா பிரதேசத்தில் ஆற்றைக் கடக்க முற்பட்ட போது வெள்ளி நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் காணாமல் போயுள்ளனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களான குறித்த மூவரும் தொழிலுக்குச் சென்று வீடு திரும்பும் போது கயிற்றின் உதவியுடன் ஆறொன்றைக் கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஆண்கள் இருவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் நீரில் அடித்துச் செல்லும் காணொளி பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. பாதுகாப்பற்ற முறையில் ஆற்றைக் கடக்க முயன்றமையே அனர்த்தத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

திங்கட்கிழமை (1) அதிகாலை நுவரெலியா மாவட்டத்தில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் டெப்லோ பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்து இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. குறித்த இரு வீடுகளில் ஒரு வீட்டிலிருந்த 39 வயதுடைய நபரொருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் விதுலிபுற – டெப்லோ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவ்வாறு மண் மேடு சரிந்து விழுந்ததில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் நோட்டன் பிரிட்ஜ் பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தினூடான புகையிரத சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம்

மலையகப் பகுதியில் ஹிகுருஓயாவிற்கும் ரொசெல்லவிற்கும் இடையில் பல இடங்களில் புகையிரதப் பாதைகளில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளமை மற்றும் மண்சரிவு என்பவற்றின் காரணமாக மறு அறிவித்தல் வரை அப்பகுதியூடான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்படவிருந்த பொடி-மெனிகே மற்றும் உடரட-மெனிகே ஆகிய ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

காலி, அம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று புதன்கிழமை மாலை 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்