
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும்மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கடும்மழை பெய்து வருகிறது. இந்த கடும்மழையால் 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஹெனான் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில் கடந்த சனிக்கிழமை (18) இரவு 8 மணி முதல் நேற்று (21) இரவு 8 மணி வரையில் 61.71 செ.மீ. மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவித்த வானிலை அதிகாரிகள் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த கடும் மழையின் காரணமாக தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் வீதிகள், பாலங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அங்குள்ள பல நகரங்களில் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளன. மேலும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும்மழை, வெள்ளத்தை தொடர்ந்து ஹெனான் உள்ளிட்ட பல மாகாணங்களில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளன. இதனிடையே இந்த கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்ததாகவும், 1.77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மழை, வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தென் சீன பகுதிகளில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.