
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவு அதிகமான டெங்கு நுளம்பு பரவும் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.
ஒரு மாத காலத்திற்குள் அதிகமான டெங்கு நோயாளர்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் கேட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் மற்றும் மதஸ்தலங்களில் அதிகமான டெங்கு நுளம்பு பரவும் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மிகவும் அபாயமான நிலை ஏற்படுமெனவும் தெரிவித்தார்.
வீடுகள், நீர் கசிவு ஏற்படும் இடங்கள், மலசல கூடங்கள் போன்றவற்றிலும் டெங்கு நுளம்புகளின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு டெங்கு நோயினால் பலர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சில கிராம சேவகர் பிரிவுகள் சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறும் இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கு ஒழிப்பு செயலணி, சமூக மட்ட தலைவர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருவதாகவும் கூறினார்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சுத்தமாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.