சவுத்தாம்ப்டன் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர் (6 விக்கெட்டுகள்), கேப்ரியல் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ப்ரூக்ஸ் 39 ரன்களும், ராஸ்டன் சேஸ் 47 ரன்களும், பிராத்வைட் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61 ரன்களும் அடித்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராய் 42 ரன்களுடனும், சிப்லி 50 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

சற்று நிலைத்து நின்று ஆடிய சக் 76 ரன்களை அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும்போது தனது இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 199 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

பின்னர், ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரோஸ்டன் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால், நிலைத்து நின்று ஆடிய பிளாக்வுட் 154 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 95 ரன்கள் விளாசினார்.

இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கான 200 ரன்களை எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

137 ரன்கள் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.

முகநூலில் நாம்