
எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் குறித்த சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எத்தியோப்பியா மூத்த அரச அதிகாரி ரெட்வான் ஹூசைன் கூறுகையில், ‘டிக்ரே விவகாரம் குறித்து எத்தியோப்பிய அரசாங்கத்தால் விசாரணை நடத்த முடியாத சூழலில்தான் சர்வதேச விசாரணை தேவை.
ஆனால், எங்களது அரசாங்கத்தால் விசாரணை நடத்த முடியாது என முடிவுக்கு வருவது அரசாங்கத்தை சிறுமைப்படுத்தும் செயலாகும்.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எங்கள் விவகாரத்தை கவனித்துக் கொள்ள வெளி நபர்களின் உதவி தேவையில்லை’ என கூறினார்.
கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ‘டைக்ரேயன்ஸ்’ எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.
டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.
இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.
இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. தற்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.