சர்வதேச நகராக மாறிய மீன்பிடி கிராமத்தின் குட்டி கதை!

ஓர் அறையில் காற்றின் அழுத்தம் சமநிலையில் இருப்பதைப் போன்றே ஒரு நாட்டின் வளர்ச்சி நாடு முழுக்கப் பரவ வேண்டும். அதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி. அந்த அடிப்படையில்தான் சீனாவின் ஒவ்வொரு தொலைநோக்குத் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தின் நிலவியல் மேம்பாடுகளுக்கு ஏற்ப திட்டம் வகுத்து வளர்ச்சியைக் கொண்டு வருவதில் சீனாவின் சாதுர்யம் அமைந்துள்ளது. அத்தகைய தொலைநோக்குத் திட்டத்தில் உதித்ததுதான் ஷென்ஜென் சிறப்புப் பொருளாதார மண்டலம். 1980இல் சீனாவில் முதன்முறையாகத் தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் இது, இவ்வாண்டு 40ஆவது ஆண்டு நிறைவு.

ஒரு எளிமையான மீன்பிடி கிராமமாக இருந்த ஷென்ஜெனை சர்வதேசத் தரம் வாய்ந்த நகராகக் கொண்டு வந்து காட்டியதில் வெளிப்படுகிறது சீனாவின் சாதனை. ஏதோ ஓரிரு ஆண்டுகள் உழைப்பைப் போட்டு கிடைத்த பலன் அல்ல இது; மாறாக, 40 ஆண்டுகால உழைப்பு; தொடர்ச்சியான கடும் உழைப்பு; கூட்டு உழைப்பு.

முன்பு, சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழகத்தின் ஆழி பதிப்பக உரிமையாளர் ஆழி செந்தில்நாதன் மிகவும் பிரமித்துப் பேசிய நகர் ஷென்ஜென். ஒரு சாதாரண கிராமத்தை இத்தகு செழிப்பான சர்வதேச நகராக சீனாவால் மட்டுமே மாற்ற முடியும். கடலூர் போன்ற கடற்கரையோர நகரை இப்படி மாற்ற வேண்டும் என்று எனக்கும்தான் விருப்பமாக உள்ளது, என்று கூறினார்.

சீனாவின் சிலிக்கன் வேலி என்ற பெருமையை இந்நகர் பெற்றுள்ளது. நகர் முழுவதும் ஆங்காங்கே முளைத்துள்ள வானளாவிகள், நகர் முழுவதும் 5ஜி பயன்பாடு (உலக அளவில் இத்தகைய வசதி ஷென்ஜென்னில் மட்டுமே உள்ளது), ஆண்டுக்கு 30 கோடி டன்னுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாளும் துறைமுகங்கள், 29 நாடுகள் மற்றும் 60 நகரங்களை இணைக்கும் விமான நிலையங்கள், உலகத் தரவரிசையில் புதுமைகள் கண்டுபிடிப்பில் 4ஆவது இடம் என பல சாதனைகளைத் தனது பட்டியலில் இந்நகர் கொண்டுள்ளது.

1980 ஆம் ஆண்டில் இந்நகரின் ஜிடிபி 27 கோடி யுவான்; 2019இல் 2.69 டிரில்லியன் யுவான். ஒரு கிராமம் சர்வதேச நகராக மாறியுள்ளதைக் காட்டுவதற்கு இப்புள்ளிவிவரம் போதுமானதாக இருக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு வங்கிகள் தங்களின் கிளைகளை, சீனாவின் பெருநிலப்பகுதிகளில், ஷென்ஜெனில்தான் முதன்முறையாகப் அமைத்தன. 1990ஆம் ஆண்டில் ஷென்ஜென் பங்குச் சந்தை திறக்கப்பட்டது. இது, சீன பெருநிலப் பகுதியின் 2ஆவது பங்குச் சந்தை. சரியான திட்டமிடல், உரிய காலத்துக்குள் அதனைச் செயல்படுத்துதல், தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரவேற்பு, திறமைசாலிகள் ஊக்குவிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஷென்ஜென் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சீனாவில் 2017 ஆம் ஆண்டு சர்வதேசக் காப்புரிமை பெற்ற புதிய கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை 49; அவற்றில் பாதி ஷென்ஜெனில் இருந்து வந்தவை. இதனால், உலக அளவில் ஷென்ஜென் நகர் 4ஆவது இடத்தைப் பிடித்தது. பெரும் தொழிற்சாலைகள் இந்நகரில் அமைந்துள்ளன. இந்நகரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட உற்பத்திச் சாதனங்களை தமிழகத்தின் சிறு கிராமத்தில் உள்ள தொழில்கூடத்தில்கூட காண முடியும். தமிழகம் உள்பட உலகின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொழில்நிமித்தமாக அடிக்கடி செல்லும் நகராக ஷென்ஜென் உள்ளது.

ஒரு நாடு என்பது ஒரு பெரிய மரம் போன்றது. நிலத்துக்கு அடியில் பரவிக் கிடக்கும் வேர்கள் எப்படி மரத்தின் வளர்ச்சிக்குக் காரணமோ, அப்படித்தான் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாக பல நகரங்கள் உள்ளன. நகரங்களின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வளர்ச்சி; நாட்டின் அடையாளம். அத்தகைய உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்கும் முயற்சியில்தான் சீனா பயணித்து வருகிறது. அதற்கு, சீனாவின் அரசியல் அமைப்பு முறையும், சீனாவின் வேகமும் உதவிகரமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்