சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 82 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராஜ்கொட், சௌராஷ்டிரா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) இரவு நடைபெற்ற 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 82 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 2 என சமப்படுத்தியது.


இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 87 ஓட்டங்களுக்கு சுருண்டது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.


தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களும் ஆவேஷ் கானின் 4 விக்கெட் குவியலும் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.


சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் இருதரப்பு தொடர்கள், உலகக் கிண்ணம் மற்றும் ஐபிஎல் ஆகிய போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2006 டிசம்பர் 1ஆம் திகதி நடைபெற்ற ஒற்றை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார்.
அன்றிலிருந்து 16 வருடங்கள் கடந்த நிலையில் தனது 36ஆவது போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைக் குவித்த தினேஷ் கார்த்திக் இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலியிருந்தார்.


சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் 2 போட்டிகள் கொண்ட முதலாவது இருதரப்பு தொடர் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நியூஸிலாந்தில் அதே வருடம் டிசம்பர் 22, 26ஆம் திகதிகளில் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 12.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.


ஆனால், அடுத்த 7.5 ஒவர்களில் (43 பந்துகள்) 88 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 169 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.
ஹார்திக் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் 5ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்தினர்.
தினேஷ் கார்த்திக் 27 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் ஹார்த்திக் பாண்டியா 31 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.


அவர்களைவிட 27 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரிஷாப் பன்ட் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
170 ஒட்டங்களை வெற்றி இலக்காக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 16.5 ஓவர்களில் 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.


தென் ஆபிரிக்கா தனது துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்து 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தசை இழுப்பினால் பெரிதும் அவதிப்பட்ட அணித் தலைவர் டெம்பா பவுமா 8 ஓட்டங்களுடன் ஓய்வுபெற்றார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் தென் ஆபிரிக்காவின் விக்கெட்கள் சரிந்தன.

தென் ஆபிரக்க துடுப்பாட்டத்தில் குவின்டன் டி கொக் (14), ரசி வென் டேர் டுசென் (20), மார்க்கோ ஜன்சென் (12) ஆகிய மூவர் மாத்திரம் இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆவேஷ் கான் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷல் பட்டேல் 2 ஓவர்களில் 3 ஒட்டகங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்