
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
அதற்கமைய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமர்ப்பித்துள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். நிதி அமைச்சில் நண்பகல் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தேவை குறித்து பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய சர்வகட்சி அரசாங்கம் 6 மாதங்கள் அல்லது ஒரு வருட கால வரையறைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், அதன் அமைச்சர்களின் எண்ணிக்கை 15 – 20 க்கு இடைப்பட்டதாக அமைய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படக் கூடிய வேலைத்திட்டங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் சு.க. யோசனைகளை முன்வைத்துள்ளது.
இது தவிர 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக மீள நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக முன்வைத்த யோசனைகளை தற்போதைய ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். எமது யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்னர் மீண்டும் எம்மை சந்திப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதே வேளை , மக்கள் மத்தியில் காணப்படும் அமைதியற்ற சூழலை தணிப்பதற்கு மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டோம். எமது யோசனைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இது சாதகமானமொரு சமிஞ்ஞையாகும்.
எனவே தான் மீண்டுமொரு தினத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இப்போதே சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் நூறு வீதம் உறுதியாகக் கூற முடியாது.
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதியும் அரசாங்கமுமே முன்னெடுக்க வேண்டும்.
நாடு தற்போதுள்ள நிலைமையில் சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஸ்திரமான சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.