சர்ச்சைக்குள்ளானார் எம் எஸ்  தோனி

அணித் தலைவராக மகேந்திர சிங் தோனி களத்தில் எடுத்த பல்வேறு முடிவுகள் பாராட்டுகளையும், விமரிசனங்களையும் பெற்றுள்ளன. அவரது முடிவின் விளைவு நேர்மறையாக அமைந்தால் பாராட்டும், எதிர்மறையாக அமைந்தால் விமரிசனமும் எழும்.

இந்த முறை சற்றும் வித்தியாசமாக களத்துக்கு வெளியே அவர் எடுத்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருந்தார். இதன் காரணமாக தோனி, ரெய்னா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் 5 நாள்கள் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டனர். சென்னைக்கு வரும் முன்பு அனைவரும் கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதனை மூலம் உறுதி செய்த பிறகே புறப்பட்டனர்.

தோனியின் விருப்பப்படி சென்னையிலும் பயிற்சி முகாம் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 21-ம் திகதி துபைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், துபையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்கள் இருவர் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகுதான், அனைத்து விஷயங்களும் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசிய விடியோ பெரிதளவில் பகிரப்படத் தொடங்கியது. சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம் பற்றி அந்த விடியோவில் அவர் தெரிவித்ததாவது:

“சென்னையில் பயிற்சி முகாமை நடத்தினால் பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும். இதனால் முதலில் நாங்கள் தயங்கினோம். துபை செல்வதற்கு முன்பு சென்னையில் 5 நாள்கள் பயிற்சி முகாமை நடத்துவதால் பயன் உண்டா என தோனியிடம் கேட்டேன். ஆனால் தன்னுடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.

இல்லை சார். கடந்த நான்கைந்து மாதங்களாக யாரும் கிரிக்கெட் விளையாடவில்லை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். சென்னையில் பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டால் தான் அதுபற்றி தெரியவரும். துபைக்குச் செல்லும்போது இந்த அனுபவம் உதவியாக இருக்கும். மேலும் உடற்தகுதியை மீட்டெடுக்க இது உதவும் என்று என்னிடம் தோனி விளக்கம் அளித்தார். எங்களுக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் பயிற்சி முகாம் மிகவும் உதவியாக இருந்தது” என்றார் அவர்.

சென்னையில் பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டால், துபை செல்லும்போது அனுபவம் உதவியாக இருக்கும் என்பதுதான் சென்னை அணி நிர்வாகத்தை ஒப்புக்கொள்ள வைத்த பிரதான விஷயமாக இருந்திருக்கக்கூடும்.

ஆனால் சென்னைக்கு புறப்பட்டதிலிருந்து, சென்னையில் பயிற்சி மேற்கொண்டது மற்றும் துபை புறப்படும் வரை சென்னை வீரர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவர்கள் பகிர்ந்த பெரும்பாலான புகைப்படங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் இருப்பது, முகக் கவசம் அணியாமல் இருப்பது பாதுகாப்பு வளைய விதிகளை பின்பற்றாததை வெளிப்படுத்துகிறது.

சென்னையில் பயிற்சி மேற்கொண்டதற்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதியானதற்கும் தொடர்பில்லை என்றபோதிலும், சென்னை பயிற்சி முகாமுக்கு நோக்கமாக இருந்த பாதுகாப்பு வளைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.

சென்னை வந்த விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படப் பதிவொன்றில் தீபக் சாஹரின் உறவினர் ராகுல் சாஹர் கமெண்ட் செய்திருப்பதும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில், முகக் கவசம், சமூக இடைவெளி எங்கே? என்ற கேள்வியை ராகுல் சாஹர் முன்வைத்திருந்தார். அனைவரும் 2 முறை பரிசோதனை எடுத்துக்கொண்டோம், ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தீபக் சாஹர் பதிலளித்திருந்தார்.

தற்போது சென்னை அணியில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் தீபக் சாஹரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தீபக் சாஹர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாக வாழ்த்து கூறி ராகுல் சாஹர் சுட்டுரையில் கடந்த சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பதுவே அடிப்படை அத்தியாசவசியமானதாக பார்க்கப்படுகிறது.

மற்ற அணிகள் அனைத்தும் துபையில் பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை அணி இன்னும் பயிற்சியைத் தொடங்கவில்லை. சென்னை அணியின் பயிற்சி செப்டம்பர் 1-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் செப்டம்பர் 19-ம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அபுதாபியில் நடைமுறையிலுள்ள விதிமுறை காரணமாக போட்டி அட்டவணை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை – சென்னை மோதுகின்றன. இந்த நிலையில், சென்னை அணியில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது கூடுதல் தாமதத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து, பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்பது உறுதியானால்கூட, பாதுகாப்பு நடவடிக்கைளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையுமே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

“நம்முள் யாரேனும் ஒருவர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த தொடரே பாழாகிவிடும். எனவே, பாதுகாப்பு வளைய விதிமுறைகளில் எவ்வித சமரசமுமில்லாமல் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.”

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி தெரிவித்தது இது. பெங்களூரு மட்டுமின்றி அனைத்து ஐபிஎல் அணிகளுமே இதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்