சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டியில் பொலிஸ் கழகம் 9 ஆவது முயற்சியில் முதலாவது வெற்றி

நடப்பு பருவகால சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பொலிஸ் கழகம் தனது 9 ஆவது முயற்சியில் முதலாவது வெற்றியை சுவைத்ததுடன் குருநாகல் பெலிக்கன்ஸ் சாதனைமிகு வெற்றியைப் பதிவு செய்தது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (13) பிற்பகல் நடைபெற்ற மொரகஸ்முல்லை கழகத்துக்கு எதிரான போட்டியில் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொலிஸ் கழகம் வெற்றியீட்டியது.

தனது முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றியையேனும் பெறாமல் இருந்த பொலிஸ்  கழகம்   போட்டியின் கடைசிக் கட்டத்தில் போட்ட கோலின் மூலம் முதலாவது வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற கங்கணத்துடன் களம் இறங்கிய பொலிஸ் கழகம்  போட்டியின் 10ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை போட்டது.

ஷிஷான் ப்ரபுத்தவின் கோர்ணர் கிக் பந்தை தனுஷ பெரேரா தலையால் முட்டி அன்தனி தனுஜனுக்கு பரிமாற அவர் கோல் காப்புக்கு அருகிலிருந்து பந்தை கோலினுள் புகுத்தினார்.

எனினும் 12 நிமிடங்கள் கழித்து எரந்த ப்ரசாத் பரிமாறிய பந்தை ஷெனால் சூரியகே கோலாக்க முயற்சித்தார். ஆனால், அவர் உதைத்த பந்து பொலிஸ் கோல்காப்பாளர் கென்ட் அண்ட்ராடோவின் கைகளில் பட்டு முன்னோக்கிவர அதனை திசர டி சில்வா கோலாக்கி மொரகஸ்முல்லை சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளைக்கு 3 நிமிடங்கள் இருந்தபோது மொரகஸ்முல்லை வீரர் ஒருவர் பந்தை கையால் பிடித்ததால் பொலிஸ் கழகத்தக்கு மத்தியஸ்தர் தரங்க குமாரவினால் பெனல்டி ஒன்று வழங்கப்பட்டது. எனினும் மொஹமத் சாஜித் உதைத்த பெனல்டியை மிகவும் இலாவகமாக கோல்காப்பாளர் விமுக்தி மதுவன்த தடுத்து நிறுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்ததுடன் கோல்களும் தவறவிடப்பட்டன.

இடைவேளைக்குப் பின்னர் 46ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் நுழைந்த ஹசரங்க ப்ரியநாத் 76ஆவது நிமிடத்தில் பொலிஸ் கழகத்தின் 2ஆவது கோலைப் போட்டார்.

அந்த கோலே பொலிஸ் கழகத்தின் வெற்றி கோலாக அமைந்தது.

பெலிக்கன்ஸ் கோல் மழை

குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு  சம்பியன்ஸ்    லீக் போட்டியில் சொலிட் கழகத்தை எதிர்த்தாடிய பெலிக்கன்ஸ் கழகம் கோல் மழை பொழிந்து சாதனை மிகு வெற்றியை ஈட்டியது. அப் போட்டியில்  பெலிக்கன்ஸ்   கழகம் 8 – 1 என்ற கொல்கள் அடிப்படையில் அமோக வெற்றிபெற்றது.

இந்த கோல் என்ணிக்கையானது இந்த வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் போடப்பட்ட அதிகூடிய கோல்களாகும்.

அத்துடன் போட்டி  ஒன்றில் தனி ஒரு கழகம் போட்ட அதிக கோல்கள் என்ற சாதனையை பெலிக்கன்ஸ் நிலைநாட்டியது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய பெலிக்கன்ஸ் கழகம் இடைவேளையின்போது 3 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

பெலிக்கன்ஸ் சார்பாக டியோபெனோவ் சசா 17, 25, 50ஆவது நிமிடங்களிலும் நப்சான் மொஹமத் 39, 74, 89ஆவது நிமிடங்களிலும் எடிசன் பிகராடோ 61ஆவது நிமிடத்திலும் ஜெயகுமார் ஷாந்தன் 71ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டனர்.

சொலிட் சார்பாக நிமால் நிம்ரன் மின்ரன் போட்டியின் 45ஆவது நிமிடத்தில் பெனல்டி கோல் ஒன்றைப் போட்டார்.

நியூ ஸ்டார் – சுப்பர் சன் வெற்றிதோல்வி இல்லை

காலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ ஸ்டார் கழகத்துக்கும் பேருவளை சுப்பர் சன் கழகத்துக்கும் இடையிலான போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டு அணியினரும் ஆக்ரோஷத்துடனும் முரட்டுத்தனத்துடனும் விளையாடிய போதிலும் கோல் போடுவதில் கோட்டை விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்