சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை
செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு
சுதந்திரத்தை வழங்கும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான
வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி
ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “வரவு செலவுத் 530 பில்லியன் ரூபா
பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான
இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.

2009 க்கு பின்னர் இராணுவத்தினருக்கான செலவு குறையும் என்று
எதிர்பார்த்தாலும் ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டே போகின்றது.
கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறைந்தளவே நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சமூக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இது தொடர்பில்
கேள்வியெழுப்புகின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்
பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு
பாதுகாப்புக்கான செலவீனம் அதிகரிப்பதன் ஊடாக வடக்கு ,கிழக்கில் இன்னும்
சமாதானம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகள், விவசாய காணிகளை
கைப்பற்றி வைத்திருக்கின்றது. மக்களுக்கு அதிக வருமானத்தை
பெற்றுக்கொடுக்கும் காணிகள் அதிகளவில் இராணுவத்தினர் வசமுள்ளது. மக்கள்
வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

மாகாண சபைகள் மக்களுக்காக நல்ல வேலைத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில்
இராணுவம் காணிகளை கைப்பற்றி செயற்படுகின்றது. மேலும் வடக்கில் இராணுவ
முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இங்குள்ள காணிகளை
மக்களுக்கு வழங்க வேண்டும்.
இதேவேளை ஒற்றையாட்சிக்குள் இருந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களின் உதவிகளை
பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கு, கிழக்கிற்கு நீதி வழங்க வேண்டும்.

எங்களுடைய தேவைகள் எங்களுக்கு முன்னுரிமையதாகவே இருக்குமே தவிர மத்திய
அரசுக்கு தேவையானதாக இருக்காது.

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை
செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு
சுதந்திரத்தை வழங்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்