
சந்திரனின் மேற்பரப்பில் புதிய குழி ஒன்று காணப்படுவதை நாசா நிறுவனம் அவதானித்துள்ளது. ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் மோதியதால் இக்குழி ஏற்பட்டிருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்காக லூனா 25 எனும் விண்கலத்தை கடந்த மாதம் ரஷ்யா அனுப்பியிருந்தது. எனினும் அக்கலம் கடந்த 19 ஆம் திகதி சந்திரனில் வீழ்ந்து நொருங்கியது.
இந்நிலையில், அவ்விண்கலம் வீழ்ந்த இடத்துக்கு அருகில் புதிய சிறிய குழி ஒன்று காணப்படுவதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.
சுந்திரனை வலம்வரும் தனது விண்கலம் ஒன்றின் மூலம், கடந்த வருடம் ஜூன் மாதமும் இவ்வருடம் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் பிடிக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டதன் மூலம் இப்புதிய குழியை நாசா கண்டறிந்துள்ளது. இதனால் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் வீழ்ந்தமையாலேயே இக்குழி ஏற்பட்டிருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
லூனா 25 ஆனது, 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யா முதல் தடவையாக சந்திரனுக்கு அனுப்பிய விண்கலம் ஆகும்.