கோரிக்கைகள் நேர்காணல் – சுரேஸ் பிரேமச்சந்திரன்: கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது பற்றி பரிசீலிக்க முடியும்

1970களில் எழுச்சியடைந்த தமிழ் மக்களுடைய விடுதலைக்கான ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்ட முன்னோடிப் போராளிகளில் ஒருவரான சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக வழிமுறை அரசியலில் பங்கேற்று இலங்கையின் பாராளுமன்ற  உறுப்பினராக (Member of Parliment) செயற்பட்டவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் பின்னர் கூட்டமைப்பை வலுவாக்கம் செய்வதிலும்  முன்னின்று உழைத்த தலைவர்களில் ஒருவர். கூட்டமைப்பை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அதன் சாத்திய மட்டுப்பாடுகளின் நிமித்தமாக அதிலிருந்து வெளியேறி இப்பொழுது ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற புதிய அரசியற் கட்டமைப்பை ஏனைய தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளோடு இணைந்து உருவாக்கியுள்ளார். 

இலங்கை அரசியற் பரப்பிலும் தமிழ் மக்களுடைய அரசியற் போராட்டப்பரப்பிலும் கடந்த 45 ஆண்டுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்தக் காலகட்டத்திலிருந்த ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள், இந்திய – தமிழகத் தலைவர்கள், இலங்கை அரசியற் தலைமைகள் எனப் பல தரப்புகளோடும் அரசியல் பயணங்களை மேற்கொண்ட ஆளுமையாவார். வடக்குக் கிழக்கிலும் இலங்கையின் தேசிய அரசியற் பரப்பிலும் தொடர்ச்சியாக அரசியல் செல்வாக்கைக் கொண்டிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் இன்றைய இலங்கை நிலவரத்தைப் பற்றியும் எதிர்கால நிலைமைகளைப் பற்றியும் “எதிரொலி” காக உரையாடினோம்.

–         அதிசயன்

1. நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு எப்படியான  தீர்வை, எந்த அடிப்படையில் காணமுடியும்?

1977ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்து இறக்குமதிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. இது, குண்டூசியிலிருந்து சகல பொருட்களுக்கும் இலங்கை வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. வெறுமனே தைத்த ஆடைகளின் ஏற்றுமதி, சுற்றுலாப் பிரயாணத்துறையின் ஊக்குவிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை மக்களை பணிக்கு அமர்த்தியதனூடாகவும் சிறிதளவு தேயிலை ஏற்றுமதியினூடாகவும் பெறப்பட்ட அன்னியச் செலாவணி போன்றவைதான் இந்த நாட்டின் பொருளாதாரமாக இருந்தது.

1977ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை ஆரம்பித்து ‘போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ என்ற யுத்தப் பேரிகையை முழங்கி, தமிழ் மக்கள்மீது ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்தைத் திணித்தவர் ஜெயவர்த்தன. பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய தேசிய இனப் பிரச்சினையை பாரிய யுத்தமாக மாற்றியதில் ஜெயவர்த்தனவிற்கும் பெரும் பங்குண்டு. அதுவே பின்னர் 35வருட யுத்தமாகவும் நீடித்தது. இந்த நாசகர யுத்தத்திற்கு இவர்கள் வாங்கிய கடன்கள் பல்லாயிரம் கோடி டொலர்கள். இதில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடமிருந்து மிக அதிகளவில் யுத்த்தத்திற்கான கடன்கள் பெறப்பட்டது. இவற்றிற்காக சீன  நலன்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் கட்டியெழுப்பி சீனாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விமானங்களே வராத மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை கிரிக்கெட் மைதானம், நாட்டிற்கு அவசியமே இல்லாத எக்ஸ்பிரஸ் ஹைவே இப்படி எத்தகைய தொலைநோக்குப் பார்வையுமற்ற முதலீடுகளின் மூலம் இலங்கையை சீனா மிகப் பெரும் கடனாளியாக்கியது.

இவ்வாறு எத்தகைய பயனுமற்ற கருத்திட்டங்களின் மூலமாகப் பல்லாயிரம் கோடி கழிஷன்களைப் பெற்று பயனடைந்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே தவிர, நாட்டிற்கு எந்தவித பலன்களும் கிட்டவில்லை. நாட்டு மக்களின்மீது கடன் சுமை ஏறியதுதான் மிச்சம். இவ்வாறுதான் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தது. ஆகவே, அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட 35 வருடகால யுத்தம் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள், மிகப்பெருமளவிலான ஊழல், எத்தகைய தூரநோக்கோ, திட்டமிடலோ அற்ற கருத்திட்டங்கள் இவற்றுடன் சேர்ந்த கொவிட் 19 பேரனர்த்தம் ஆகியவை இணைந்து இன்று இலங்கையை ஒரு திவாலான நாடாக மாற்றியுள்ளன. ஆகவே இந்த நெருக்கடியிலிருந்து நாம் எத்தகைய தீர்வை அடைய முடியும் என்பதுதான் இப்பொழுது இருக்கின்ற கேள்வி. முக்கிய சிங்கள பொருளாதார வல்லுனர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய வேண்டும். அந்த காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு முறையான தீர்வைக் கண்டறியாவிட்டால் இந்தப் பொருளாதார நெருக்கடி தொடர்கதையாக நீண்டு செல்லலாம்.

இன்றைய சூழ்நிலையில், ஏறத்தாழ 15 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கோர் இலங்கையில் முதலீடு செய்யவும் ஆவலாக உள்ளனர். ஆனால், அவர்கள் கொழும்பை நம்புவதற்குத் தயாராக இல்லை. வடக்கு-கிழக்கில் உற்பத்திசார் துறைகளில் அவர்கள் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால், வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்கவோ, அந்த முதலீடுகளுக்கான பாதுகாப்பை வழங்கவோ, அவற்றுக்குத் தேவையான வரிச்சலுகையை வழங்கவோ இல்லையேல் அவ்வாறானவர்களுக்கான ஏனைய ஊக்குவிப்புகளை மேற்கொள்ளவோ மாகாணசபைகளுக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே மாகாணசபைகளுக்கு அத்தகைய அதிகாரங்களைக் கொடுக்கும் பட்சத்தில், இலங்கையில் அன்னிய முதலீடுகளைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

இப்பொழுது அரசாங்கம் உலக நாடுகளுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் மேலும் மேலும் கடன் வேண்டுவதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் கடன் தொகையை மதிப்பீடு செய்து அதன் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக இலங்கையால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட பிரெஞ்சு நிறுவனம் இலங்கையின் இன்றைய கடன் 97 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பீடு செய்துள்ளது. இப்பொழுது இலங்கை அரசாங்கம் பெறவிரும்பும் கடனையும் இணைத்தால் இலங்கையின் கடன்தொகையானது நூறு பில்லியனைத்; தாண்டும். இலங்கையின் இத்தகைய மோசமான பொருளாதார சூழ்நிலையில், ஏனைய நாடுகளோ பல்தேசிய கம்பெனிகளோ இலங்கைக்குள் பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன்வரமாட்டா.

ஆகவே இந்த நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீள வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் இலங்கைக்கு மிகவும் அவசியம். இந்த யதார்த்தபூர்வமான உண்மையை சிங்கள பொருளாதார நிபுணர்களும் அரசியல்வாதிகளும் புரிந்துகொண்டு, சரியான நடவடிக்கைகளை எடுப்பார்களாக இருந்தால், புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்தின் தொழிலதிபர்கள், இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் நாம் இலங்கைக்கு பாரிய முதலீடுகளைக் கொண்டுவரமுடியும். இந்த முதலீடுகளின் காரணமாக அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஏற்றுமதிகள் அதிகரிக்கும். துறைமுகங்கள், விமான நிலையங்கள் விரிவடையும். இளைஞர்களும் யுவதிகளும் துறைசார் வல்லுனர்களும் நாட்டைவிட்டு வெளியே ஓடுவது நிற்கும். வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு மட்டுமன்றி, மலையக மற்றும் சிங்கள மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிட்டும்.

2. இதனைக் காணக்கூடிய நிலையில் இந்த (ரணில்-பெரமுன) ஆட்சி உள்ளதா? இல்லையெனில் மாற்று வழியென்ன?

அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கம் என்பது பல்வேறுபட்ட இனவாதிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமாகவே இருக்கப் போகிறது. முக்கியமாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தன தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பவர். இதனைப் போலவே பொதுஜன பெரமுனவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத்வீரசேகர போன்றோர் வெளிப்படையாகவே தம்மை மிகமோசமான இனவாதிகளாகக் காட்டிக் கொள்பவர்கள். இவர்களும் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

அது மாத்திரமல்லாமல், அண்மையில் கண்டியில் மகா நாயக்கர்களைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் அவர்கள், பௌத்தத்தைக் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார். கடந்த நல்லாட்சி காலத்தில் நான்கு வருடங்களாக முயற்சித்தும் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவர முடியவில்லை. அதனால் தமிழ் மக்கள் ரணில் விக்கிரசிங்க தம்மை ஏமாற்றிவிட்டதாகவே உணர்கின்றனர். அண்மையில் திரு.சம்பந்தனும் “நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம்” என்று கூறியிருந்தார். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், ஒரேயொரு ஆசனத்துடன் நாடாளுமன்றம் வந்து, மக்கள் எழுச்சி காரணமாக ஏதோவொரு வகையில் பிரதமராக வந்து, அதே போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுஜன பெரமுன சொல்வதைக் கேட்பாரா? அல்லது உண்மையை உணர்ந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து நாட்டை அவரால் காப்பாற்ற முடியுமா?

‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்றவாறுதான் நிலைமைகள் உள்ளன. யதார்த்தம் இவ்வாறாக உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்கும் வல்லமை ரணிலிடம் இல்லை என்றே நாங்கள் உணர்கிறோம்.

இலங்கை அரசாங்கம் இப்பொழுது முன்னெடுக்கின்ற மாற்றுவழி என்பது, மிக அதிகளவிலான கடன்களைப் பெற்றுக் கொள்வதே. இத்தகைய பாரிய கடன்களைப் பெறுவதானது நாடு மிகப்பெரிய அளவில் கடன்சுமையில் மூழ்குவதற்கே வழிவகுக்கும். எம்மைப் பொறுத்தவரையில், இதற்கு மாற்றுவழி என எதுவும் கிடையாது. விட்ட தவறுகளைத் திருத்தி தேசிய இனப்பிரச்சினைக்கான நிலைத்து நிற்கக்கூடிய தீர்வைக் கண்டு, தமிழ் மக்களின் பங்குபற்றுதலை உறுதிப்படுத்துவது மட்டுமே நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஒரேவழி.

3. தேசிய அரசாங்கம் அமையக்கூடிய சாத்தியமுண்டா? அதில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (விக்கினேஸ்வரன்) இணையுமா?

தற்போதைய சூழ்நிலையில் ஒரு சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்தே பேசப்படுகின்றது. இதில் தமிழ்க் கட்சிகளும் அழைக்கப்பட்டு பேசப்பட்டுள்ளது. தமிழ்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. குறிப்பாக யுத்தகாலத்தில் பறிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது, தொடர்ச்சியான காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, வடக்கு-கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைப்பது போன்ற பல கோரிக்கைகள்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது பற்றி பரிசீலிக்க முடியும் என்று விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். இவை யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள். ஆனால், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசப்படவேண்டும் என்பதுடன், அதனை முன்னிறுத்தியே தமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் பேசப்படவேண்டும். பொருளாதார நெருக்கடித் தீர்விற்கு அதுவும் மிக முக்கியமானது. ஆகவே இவற்றிற்கு ஒரு சரியான தீர்வு ஏற்படும் பட்சத்தில் சர்வகட்சி ஆட்சியில் பங்குபற்றுவது குறித்து ஆலோசிப்பதே சரியானதாக இருக்கும்.

ஆனால், அடுத்த இரண்டரை வருடத்திற்குள் இதனை ரணில் விக்கிரமசிங்க சாதிப்பாரா? ரணிலின் கடந்த கால வரலாற்றை நாங்கள் பார்க்கின்றபொழுது, இதில் பல விடயங்கள் பேச்சளவிலேயே இருக்குமே தவிர, தீர்வை நோக்கியோ, அதற்கான செயற்பாடுகளை நோக்கியோ நகரும் என எதிர்பார்க்க முடியாது.

4. மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் ஏன் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது? பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமிழந்த ஒன்றாக மாறுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சிங்கப்பூர் விடுதலை அடைந்தபொழுது, சிங்கப்பூரின் பிரதமரான லீ கிவான்யு அவர்கள் ‘சேறும், சகதியும், நுளம்பும் நிறைந்திருந்த சிங்கப்பூரை இலங்கைபோல் ஆக்குவேன்’ என்று கூறினார். அவரிடம் சிங்கப்பூர் என்ற நாட்டுப்பற்று இருந்தது. தனது நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கான திட்டமும் இருந்தது. சீன, மலாய், தமிழ், ஆங்கில மொழிகளுக்கு சம அந்தஸ்த்து கொடுக்கப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான மொழியாக ஆங்கிலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் இவற்றிற்கு நேரெதிராக இலங்கை செயற்பட்டது.

சிங்கள இனவாதம் தலைவிரித்தாடியது. தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். தமிழ் மக்கள் அரச பயங்கரவாதத்திலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவே பாரிய போராட்டமாக 2009வரை நீடித்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் இலங்கை திவாலான, வங்குரோத்தான, தோல்வியடைந்த நாடாக மாற, சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் புரிந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. சிங்கள மக்களின் தேவைகள் உதாசீனம் செய்யப்பட்டது. தமது தேவைகளுக்காக சிங்கள மக்கள் இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர் யுவதிகள் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள். இதனைப் போலவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இவ்வளவும் நடந்தும்கூட, யுத்தத்திற்குப் பின்னர் வந்த மகிந்தரின் ஆட்சியாயினும் சரி, மைத்திரி-ரணில் ஆட்சியாயினும் சரி, கோத்தபாய ராஜபக்ச ஆட்சியாயினும் சரி, கடந்தகால தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாக இல்லை.

பாராளுமன்றமானது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாக இருந்த பொழுதிலும் அவர்கள் வெறும் கதிரைகளைப் பார்த்துப் பேசுபவர்களாகவும் ஆட்சி அதிகாரத்திலிருப்போர் தாம் விரும்பியதைச் செய்வோராகவுமே இருக்கின்றனர். இத்தகைய பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்ற ஒன்றாகவே தோன்றுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகம் நீடிக்கப்படவேண்டுமாக இருந்தால், அங்கு பல்வேறுபட்ட மாற்றங்கள் செய்யப்படவேண்டும். குறைந்தபட்சம் மக்களால் தெரிவு செய்யப்படும் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்படவேண்டும். அவற்றிற்கான தீர்வுகள் சரியான முறையில் முன்வைக்கப்படவேண்டும். பெயரளவில் பாராளுமன்ற ஜனநாயகமும் நடைமுறையில் சர்வாதிகாரமாகவும் இருக்க முடியாது. ஆகவே இந்த சர்வாதிகார தன்மை மாற்றப்படவேண்டும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். தேர்தலை மதித்து தேர்தலால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை செவிமடுத்து அவை நிறைவேற்றப்பட வேண்டும்.

மேற்கண்ட மாற்றங்களுக்கு உட்படாத இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகம் வெறும் அரட்டை அரங்கமாக இருக்குமே தவிர, அது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு மன்றமாக இருக்காது.

5. பாராளுமன்றத்தினால் செய்ய முடியாததை மக்கள் தமது போராட்டத்தின் மூலமாகச் செய்துள்ளார்கள். ஏனைய வேலைகளையும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதைத்தானே பிந்திய நிகழ்ச்சிகள் – ஜனாதிபதி தெரிவு, அவசரநிலைப் பிரகடனம், தொடரும் ஆட்சி போன்றன காட்டுகின்றன. அப்படியென்றால் மக்கள் போராட்டத்தோடு நீங்களும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமல்லவா?

பாராளுமன்ற சம்பிரதாயத்தினூடாக நிலைமைகளை மாற்ற விரும்பின், அது இலகுவான காரியம் அல்ல. பிரதமர் ஒருவர் விலக்கப்பட்டாலோ பதவியிழந்தாலோ புதிய பிரதமரை நியமிப்பதற்கும், ஜனாதிபதி ஒருவர் இல்லாமல் போனால் பிரதமராக இருப்பவர் பதில் ஜனாதிபதியாக வருவதற்கும் தொடர்ந்து பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும் இலங்கையின் அரசியல் யாப்பில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மக்கள் எழுச்சியானது பிரதமர், ஜனாதிபதி ஆகியோரை விரட்ட உதவியதே தவிர, அவ்வாறு விரட்டப்பட்ட இடத்திற்கு தாங்கள் விரும்பிய ஒருவரை பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ கொண்டுவருவதற்கு அரசியல் யாப்பும் பாராளுமன்ற சம்பிரதாயங்களும் இடம்கொடுக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.

அமைதி வழியில் எல்லாமே மாற்றப்படவேண்டுமாக இருந்தால், புதிய தேர்தலுக்குப் போவதைத் தவிர மாற்றுவழியில்லை. ஆனால் புதிய தேர்தலுக்குப் போவதற்கான பொருளாதாரச் சூழல் இல்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று குறைந்தது இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என்று அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் கூறுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், ஒட்டுமொத்தமான மாற்றங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது.

மக்கள் எழுச்சியினூடாக, அவர்கள் விரும்பிய முறைமை மாற்றத்தை (System Change) கொண்டுவர முடியாது. ஏனெனில், பொதுஜன முன்னணியே நாடாளுமன்றத்தில் இன்னமும் பலம் பொருந்திய கட்சியாகவும் அவர்களே ஜனாதிபதி மற்றும் பிரதமர்களைத் தெரிவு செய்பவர்களாகவும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்களாகவும் அதற்குப் பலம் சேர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் சிஸ்டம் சேன்ஞ் என்பதும் நடைமுறை சாத்தியமற்றது.

ஊழல், நிர்வாகத்திறனின்மை, இனவாதம், இலஞ்சம் இவற்றில் ஊறித்திளைத்ததாகவே இன்றைய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் பெரும்பான்மை கட்சிகள் இருக்கின்றன. மக்கள் போராட்டங்கள் இந்த நிலைமைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுமாக இருந்தால், அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில், சரியான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் முன்வைத்து இன, மத பேதமில்லாமல், அனைவரையும் அனுசரித்துச் செயற்படக்கூடிய சக்தியாக இவர்கள் பரிணமிக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் கோரிக்கைகள் இணைத்துக் கொள்ளப்படவேண்டும். வர்க்க ரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் இந்த போராட்டம் தமக்கானது என நம்பிக்கை கொள்ள வேண்டும். சரியான பொருளாதார திட்டமிடல்களும் அதனை முன்னெடுத்துச் செல்வற்கான வழிமுறைகளும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும். இவை உள்ளடக்கப்பட்டால் அனைத்து தேசிய இனங்களும் ஓரணியில் திரள முடியும் என்பதுடன் இத்தகைய விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டால் மாத்திரமே ஒரு சிஸ்டம் சேன்ஞை உருவாக்க முடியும்.

6. நாட்டின் ஆட்சியில், ஆட்சிக் குழப்பத்தில்  அமெரிக்க, இந்தியத் தலையீடுகள் அதிகமாக உண்டென்று பகிரங்கமாகப் பேசப்படுகிறது. பாராளுமன்றத்தில் இதைப்பற்றி விமல் வீரவன்ச கூட பேசியிருந்தார். இது உண்மையா? இது இலங்கையின் இறைமையில் அநாவசியத் தலையீடு அல்லவா!

இலங்கை வங்குரோத்தான நாடாக மாறுவதற்கும் மக்கள் எழுச்சிகள் தோன்றுவதற்கும் மாறிமாறி வந்த இலங்கை அரசாங்கங்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கொள்கைகள், தவறான வெளிநாட்டுக் கொள்கைகள், பிழையான பொருளாதார கொள்கைகள், நடவடிக்கைகள், இலஞ்சம் ஊழல் போன்றவை காரணமாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்திடம் ஒரு நிலையான வெளியுறவுக் கொள்கை இருக்கவில்லை. உறுதி மொழிகளை வழங்குவதும் பின்னர் அதனைக் கைவிடுவதும், பொய்யான உறுதிமொழிகளை வழங்குவதும் இவர்களது வெளிநாட்டுக் கொள்கையில் அடங்கியுள்ளன. யுத்தம் நடைபெற்ற பொழுது இவர்கள் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் போன்ற பலநாடுகளின் உதவிகளை நாடியிருந்தார்கள். அதற்குப் பல உறுதிமொழிகளைக் கொடுத்து கடன்களையும் உதவிகளையும் பெற்றுக்கொண்டார்கள். யுத்தம் முடிந்ததும் தங்களது உறுதிமொழியிலிருந்து பின்வாங்கினார்கள். ஆனால், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும்; இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் பங்களிப்பு அவசியமானது. அதுமட்டுமன்றி, குறிப்பாக இந்தியாவின் மிக அருகில் இருக்கக்கூடிய நாடாக இலங்கை இருப்பதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.

ஆகவே, இந்தப் பிராந்தியத்திற்குள் ஏனைய வல்லரசுகளின் நடமாட்டம் என்பதும் அவர்களுடைய இராணுவ பிரசன்னங்களுக்கு இலங்கை இடம்கொடுப்பதென்பதும் அவர்களது கரிசனைக்குரிய விடயமாகும்.

7.  இந்த நாட்டின் பொருளாதாரத் துறையினர், அது சார்ந்த நிபுணர்கள் எல்லாம் ஏன் இந்த நெருக்கடியைப் பற்றிச் சிந்திக்காமல் வெளியே நிற்கிறார்கள்? இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் போன்றவற்றில் எத்தகைய சாத்தியங்கள் உள்ளன? அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

இலங்கையில் நிலவுகின்ற சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதமும் இனவாதமும் நூறுவருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இலங்கையின் அரசியல்வாதிகளும் பொருளாதார நிபுணர்களும் ஏனைய துறைசார் நிபுணர்களும் இந்த மேலாதிக்கவாதத்திற்கும் இனவாதத்திற்கும் உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை என்பது ஒரு சமச்சீரான வளர்ச்சி பெற்ற பிரதேசமாக இல்லாமல், சில இடங்கள் முன்னேற்றமடைந்த நிலையிலும், சில இடங்கள் பின்தங்கிய சூழலில் சிக்கித்தவிப்பதும் இன்னமும் இருக்கின்றது.

நாட்டின் ஒரு பகுதி சிங்கள புத்திஜீவியினர் பொருளாதார சீர்கேடுகளுக்கான அடிப்படைகளைப் புரிந்து கொண்டிருந்தாலும் இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற இனவாதத் தன்மையை விளங்கிக் கொண்டிருந்தாலும், அதைப்பற்றிப் பேசினால், அவைபற்றி கருத்தாடல்களை நிகழ்த்தினால் தாமும் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற ஒரு அச்சவுணர்வு அவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக உண்மையைப் பேசுவதற்கும் நாட்டின் உள்ளார்ந்த பிரச்சினையை வெளிக்கொண்டு வருவதற்கும் பெரும்பான்மையின புத்திஜீவிகள் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். சுதந்திரக்குப் பின்னர், குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் என்பது பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்புகளிலும் பின்தள்ளப்பட்ட ஒரு பிரதேசமாகவே இருந்து வருகின்றது. அங்கிருக்கின்ற மூலவளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால், வடக்கு-கிழக்கின் வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியும் இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும். 15இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் உலகம் முழுவதிலும் இருந்தும்கூட, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதற்கு மிகக் கடினமாக போராட வேண்டியுள்ளது. எந்தவொரு ஜனாதிபதியும் அதனைத் தரமுயர்த்த விரும்பவில்லை என்பதே யதார்த்தமான உண்மை.

அதனைப் போன்றே காங்கேசன் துறைமுகத்தையும்கூட, அதனை இயங்க வைக்கும் நிலைக்குக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. எனவே மேலாதிக்க மனோநிலையிலிருந்து பொருளாதார நிபுணர்களும் அரசியல்வாதிகளும் மாறவேண்டும். என்னென்ன மாற்றங்களைச் செய்தால் பொருளாதார ரீதியில் உயர்வடையலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். வடக்கு – கிழக்கில் இருக்கின்ற விவசாயம், கடல் மற்றும் மனித வளங்களை அதியுச்ச பாவனைக்குக் கொண்டு வருவதற்கும் பதினைந்து இலட்சம் புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பினை பொருளாதார வளர்ச்சிக்குப் பெற்றுக்கொள்வதற்குமான மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும்.

இன்றைய சூழலில், ஏறத்தாழ நூறு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சுமையில் இருக்கும் இலங்கை, கடந்த கால தவறுகள், நிகழ்கால தேவைகள் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, பிழைகளைத் திருத்தி, புதிய புதிய உத்திகளைக் கையாண்டு, அனைத்து தேசிய இனங்களையும் அரவணைத்து, எல்லோரும் பங்கெடுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த ஆலோசனைகள் பின்பற்றப்படுமாக இருந்தால், நாட்டில் மாற்றங்கள் உருவாகலாம்.

நன்றி எதிரொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்