கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட
ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட
அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுக்கள் இன்று (வியாழக்கிழமை) முர்து பெர்னாண்டோ மற்றும்
யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில்
முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
அனுப்பியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட
நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த
நாளொன்றில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வாவுக்கு
மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி துமிந்த
சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தார்.

எனினும் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின்
சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஹிருணிகா பிரேமசந்ர, அவரது தாயார் சுமனா பிரேமசந்தர மற்றும் இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன்
ஆகியோர் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த மே 31ஆம் திகதி குறித்த மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம்
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இடைநிறுத்தி,
இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்தது.

அதனைத்தொடர்ந்து, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை
சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயரிடுமாறு கடந்த 17ஆம் திகதி உயர் நீதிமன்றில்
அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை பிரதிவாதியாக பெயரிடுவது
குறித்த விடயத்தை தீர்மானிக்க, குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்