கொவிட் – 19 புனர்வாழ்வு கடன் திட்டத்தின் தவணைப் பணத்தை செலுத்த 3 மாதங்கள் நீடிப்பு  

கொவிட் தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் வழங்கப்பட்ட சௌபாக்கியா கொவிட் – 19 புனர்வாழ்வு கடன் திட்டத்தின் தவணைப் பணத்தை செலுத்துவதற்கான காலத்தை மேலும் 3 மாதங்களினால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சு இன்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதற்கமைவாக கடன் தவணைப் பணத்தை செலுத்துவதற்காக இது வரையில் வழங்கப்பட்ட 6 மாத நிவாரண காலம் 9 மாதம் வரையில் நீடிக்கப்படுகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் – 19 இரண்டாவது அலையின் காரணமாக பெரும்பாலான கடன் பயணாளிகள் எதிர்பார்த்த வகையில் தமது வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு முடியாமல் போயுள்ளது என்பதை கவனத்தில் கொண்டதன் காரணமாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொவிட் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிதியம் மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தின் முலம் நடைமுறைப்படுத்தப்பட்ட சௌபாக்கியா கொவிட் – 19 புனர்வாழ்வு கடன் திட்டத்தின் கீழ் இதுவரையில் 61,907 வர்த்தக முயற்சியாளர்களுக்கு 177.9 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கடன் வசதி வழங்கப்படுள்ளது.

கொவிட் – 19 தொற்றின் காரணமாக பாதிகப்பட்டுள்ள வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்பி இலங்கை மக்கள் வாழ்க்கையையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வழமை நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவில் வழிகாட்டலின் கீழ் சௌபாக்கியா கொவிட் – 19 புனர்வாழ்வு கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்