கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது! 

சமத்துவக் கட்சியின் தலைவரும் சுயேட்சைக்குழு 05 இல் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகக் கேடயம் சின்னத்தில் போட்டியிடுகின்றவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ….

தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அல்லது பிற தமிழ்த்தேசியவாதக் கட்சிகளோ செய்யமுடியாதவற்றை நீங்கள் எப்படிச்  செய்யப்போகிறீர்கள்?

நீங்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியது, இந்தச் சக்திகளின் தவறான அரசியலினால் இன்று தமிழ்ச்சமூகம் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது, பல வழிகளிலும் சிதைக்கப்பட்டுள்ளது (Tamil society is dameged and weakend) என்பதை. இப்போது வடமாகாணம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டும் எமது சமூகத்தின் உயிர்நாடியாகும். வேலைவாய்ப்பில்லாததால் இளைய தலைமுறையின் எதிர்கால வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் உணர்ச்சிகரமான எதிர்ப்பரசியல் நேரடியாக மக்களையே பலவீனப்படுத்துகிறது. இதனால் பலமற்றவர்களாக (Powerless peoples) எமது மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதை விடப் போர் உண்டாக்கிய பாதிப்பிலிருந்து எமது மக்கள் இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டும். இது ஒரு பெரும் பொறுப்பாகும். புதிய திட்டங்கள் தேவை. புதிய உறவுகள் அவசியம். இதற்காக நாம் முயற்சித்து வருகிறோம்.

எமது மக்களைப் பலமானவர்களாக (Powerless peoples to Powerfull community யாக) மாற்ற வேண்டும். நாங்கள் செயற்பாட்டு அரசியலையே முன்னெடுப்பவர்கள் என்பதால், எதிலும் எம்மால் வெற்றியடைய முடியும்.

அரசியல் என்பது அவ்வப்போது அறிக்கைகளை விடுவதோ பிரகடனங்களைச் செய்வதோ அல்ல. எதையும் செயற்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். அதுவே மக்களுக்கான அரசியலாகும். அப்படிச் செய்யும்போதே மக்களுடைய விடுதலையும் முன்னேற்றமும் சாத்தியமாகும். விடுதலை இயக்கங்கள் இதையே தமது வழிமுறையாகக் கொண்டன. நாம் செயற்பாட்டு அரசியலில் இயங்குவதால் எம்மால் பலவற்றையும் சாதிக்க முடியும்.

ஏற்கனவே கிளிநொச்சியில் பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறோம். மக்களுக்கான தொழில்துறைகளை உருவாக்கியிருக்கிறோம். பாடசாலைகள், மருத்துவமனைகள், குளங்கள், வீதிகள், மின்சாரம் என உட்கட்டமைப்பு, நிலமற்றோருக்கு காணிகள், வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதாரம், இயற்கை வளங்களின் பாதுகாப்பு என மக்களுக்குத் தேவையானவற்றை முடிந்தளவில் செய்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் நிலமற்றோருக்கு காணிகளை வழங்கியிருக்கிறோம். குடிநீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். இவ்வாறு மீதமுள்ளதையும் செய்வோம்.

நீங்கள் தமிழ்த்தேசியத்தை எந்த வகையில் நோக்குகிறீர்கள்?

தமிழ்ச் சமூகத்தினுள்ளிருக்கும் சாதி, பால், வர்க்க, பிரதேச முரண்பாடுகளும் சமனின்மைகளும் களையப்பட்டு, ஜனநாயகச் செழுமையோடு தமிழ்த்தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். தனியே சிங்கள ஆதிக்கத்தை எதிர்ப்பதுடன் அதனுடைய பணிகள் நிறைவடைந்து விடாது. அது தமிழ்ச்சமூகத்தினுள்ளிருக்கும் அசமத்துவங்களுக்கு எதிராகவும் உறுதியுடன் போராட வேண்டும். அந்தக் குறைகளை நீக்கியெழ வேண்டும்.

எமது மக்களின் பலமான வாழ்விலிருந்தும்  அதனுடைய அடித்தளத்திலிருந்தும்  ஜனநாயகப் பண்பிலிருந்தும்  உருக்கொள்ள வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நலனுக்கும் பாதுகாப்புக்குமானதாக இல்லாமல், அனைவருடைய பாதுகாப்புக்கும் நலனுக்குமாக இருக்க வேண்டும். அது வாய்ப்பேச்சுக்கும் அரசியல் லாபத்துக்குமாக இல்லாமல், செயற்பாட்டுக்குரியதாக இருக்க வேண்டும். அப்படி மாற்றமடையும்போதுதான் தமிழ்ச்சமூகம் உண்மையில் ஒரு குடையின் கீழ் வரமுடியும். தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் என்பதே இல்லாது போய்விடும்.

உணர்ச்சிகர அரசியலை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடுபவர்களின்  அரசியல் விளைவுகளுக்கும் உங்களுடைய கொள்கையினால் ஏற்படும் மாறுதல்களுக்கும் வேறுபாடு உண்டா?

நிச்சயமாக உண்டு. அவர்கள் மாற்றங்களை உருவாக்காமல், மக்களைப் பலவீனப்படுத்தும் எதிர்விளைவுகளை உருவாக்குகின்றனர். நாம் மாற்றங்களின் மூலமாக முன்னேற்றத்தை உண்டாக்கும் நேர்விளைவுகளை உருவாக்குகிறோம்.

உங்கள் கட்சியினால் மக்கள் மத்தியில் இனங்காணப்பட்ட பிரச்சனைகள் எவை?

அரசியல் பிரச்சினை தொடக்கம் வாழ்க்கைப் பிரச்சினை வரையில்

ஏராளம் பிரச்சினைகள் உண்டு. எல்லாமே முக்கியமானவை. அரசியல் தீர்வு கிட்டும்வரையில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு, வளப்பகிர்வில் உள்ள பாரபட்சங்கள், குறைபாடுகள், சூழல்பாதுகாப்பு, இயற்கை வளச் சிதைவுகளைத் தடுத்தல், நில அபகரிப்பு, இளைய தலைமுறையினரின் வேலை வாய்ப்புகள், எதிர்காலத்தேவைகள், புதிய தொழிற்கல்விக்கான அவசியம், தொழில்துறைக்கான முதலீடுகள், புலம்பெயர் உதவிகளை முறைப்படுத்தல், அந்த உதவிகளை ஊக்குதல், நிர்வாகக் குறைபாடுகள், விவசாயம், கடற்றொழில், பனை, தென்னை வளத் தொழில்களில் ஈடுபடுவோர் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள், சுயதொழில் முயற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், போரினால் பாதிக்கப்பட்டோரின் தேவைகள், விசேட தேவைக்குட்பட்டோரின் தேவைப்பாடுகள், காணாமலாக்கப்பட்டோரின் விடயம், அரசியற் கைகளின் விரைந்த விடுதலை, இந்தக் குடும்பங்களின் கல்வி, பொருளாதாரப் பிரச்சினைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள்… எனப் பல பிரச்சினைகள் உண்டு.

இவை எல்லாவற்றுக்கும் மிக விரைவான முறையில் தீர்வைக் காண வேண்டும். தமிழ்ச்சமூகம் தொடர்ந்தும் பிரச்சினைகளுடன் வாழ முடியாது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலமே எமது மக்களை வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி நகர்த்த முடியும்.

புதிய கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் உருவாக்கம் தமிழ்த் தேசியக் கொள்கையின் வெற்றிக்கு வழிவகுக்குமா?

தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தோரின் தவறுகளே இன்று அதனைப் பலவீனப்படுத்தியுள்ளன. ஜனநாயக உள்ளடக்கமும் சமூக நீதியும் சமத்துவமும் இல்லாத தமிழ்த்தேசியம் என்பது வெறும்கோது மட்டுமே. இதைப்போல செயற்பாட்டுத் திறன் இல்லாத தமிழ்த்தேசியம் என்பது ஏட்டுச் சுரைக்காயைப் போலப் பயனற்றே இருக்கும். இதனால்தான் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு தொடக்கம், நீதி விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோரின் விடயம், இராணுவப் பிரசன்னம், பௌத்த மயமாக்கல் என எதற்கும் தீர்வு காண முடியாமலிருக்கிறது.

ஆகவேதான் புதிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் குதித்துள்ளன. இவற்றில் பலவும் உரிய நோக்கோடு செயற்படுகின்றன என்று அர்த்தமில்லை. சில சக்திகள் தேர்தலுக்காக மட்டும் பிற சக்திகளால் திட்டமிட்டுக்  களமிறக்கப்பட்டவை. எமக்கு எதிராகவே களமிறக்கப்பட்ட சுயேச்சைக்குழுக்களும் உண்டு. ஆகவே மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து தெரிவுகளைச் செய்ய வேண்டும்.

நாம் தொடர்ச்சியான அரசியல் சமூகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் வலுவான தரப்பினர். ஏற்கனவே எமது கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களும் நகர சபை உறுப்பினர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே தேர்தலுக்காக முளைத்த காளன்களல்ல நாம். எமது வெற்றி மக்களுக்கான வெற்றியாக வேண்டும்.

தமிழ் தேசிய அரசியலின் நீரோட்டம் என்பது இறுக்கமான பூகோள அரசியலின் பக்கமா அல்லது பிராந்திய அரசியலின் பக்கமா தனது செல் வழியை தீர்மானிக்கும்?

கொரோனாவுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் புதிய அரசியல், பொருளாதார முறைமைகள் உருவாகப்போகின்றன. நாமும் அந்தப் புதிய போக்கிற்கு அமைவாகச் சிந்திக்கவும் எம்மைத் தகவமைக்கவும் வேண்டும். பிராந்திய சக்தியான இந்தியாவையும் பூகோள அரசியற் போக்கினையும் அவற்றுக்குரிய வகையில் தொடர்புற்றுக் கையாள்வது அவசியம்.

(நன்றி தமிழ் மிரர் 27.07.2020) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்