கொழும்பில் மர்ம நோய் காரணமாக இருவர் மரணம் – சிறைக்குள் நடந்த சோகம்

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் மர்ம நோய் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் குறித்த நோய் என்ன என்பதனை உறுதி செய்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 18 வயதுடைய இளைஞர் எனவும் அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் என கூறப்படுகின்றது.

சிறைச்சாலைகள் சுகாதாரத்தின் அடிப்படையில் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள இடமாகும். அவ்வாறான நிலையில் வைரஸ் நோய் அல்லது வேறு நோய்களில் இலகுவாக கைதிகள் பாதிக்கப்பட கூடும். இந்த காய்ச்சல் என்ன என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்பதனால் சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையினுள் இன்புளூயன்ஸா காய்ச்சல் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவ்வாறான நிலைமைக்கு மத்தியில் வெலிக்கடை சிறைச்சாலையில் பரவும் காய்ச்சல் என்ன என்பதனை அடையாளம் கண்டு சிகிச்சை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் நாம்