கொரோனா வைரஸ்: மலேசியா – குறையும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, அச்சத்தில் மக்கள்

மலேசியாவில் மெல்ல ஊடுருவிய கொரோனா கிருமி தற்போது தனது வேகத்தையும் வீச்சையும் காட்டத் துவங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் மூன்று பேர் அக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா கிருமித் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் கிருமி பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில், ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி நிலவரப்படி மலேசியாவில் 7 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகள் வழி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவருமே சீன குடிமக்கள் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இவர்களுள் 4 வயதுச் சிறுமியும் அடங்குவார்.

“அண்மைய பரிசோதனையின்போது ஒரு பெண்ணுக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது உறுதியானது. 60 வயதைக் கடந்த முதியவரான இவரது மாமனாருக்கும் கிருமித் தொற்று உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்று இருப்பது முதன்முதலாக இந்த முதியவரிடம் தான் கண்டறியப்பட்டது. இந்தப் பெண்மணியின் இரு குழந்தைகளும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜோகூர்பாரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் 78 பேருக்கு கிருமித் தொற்று இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 39 பேர் மலேசியர்கள். சீனாவைச் சேர்ந்த 36 பேர், ஜோர்டான், பிரேசில், தாய்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் 74 பேருக்குக் கிருமித் தொற்று இல்லை என்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக இருந்ததால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வேகமாகக் குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று அச்சம் காரணமாக மலேசியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட அறைகளை ஏராளமானோர் ரத்து செய்து வருவதாக மலேசிய தங்கு விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.

சீனக் குடிமக்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், விமானப் பயணம் மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதே இதற்குக் காரணம் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது. மேலும், சீனச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள பகுதிகளில்தான் அதிகளவில் தங்கு விடுதி அறைகளின் முன்பதிவு ரத்தாகி வருவதாக மலேசிய தங்கு விடுதி சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

லங்காவி, கோத்தசினபாலு ஆகிய பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் சீனச் சுற்றுப்பயணிகள் அதிகளவில் வருகை புரிவர். அங்குள்ள தங்கு விடுதிகளில் சுமார் 30 முதல் 60 விழுக்காடு வரையிலான தங்கு விடுதி அறை முன்பதிவுகள் ரத்தாகியுள்ளன.

அதேபோல் மலாக்கா, ஈப்போ, போர்ட்டிக்சன், பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 10 முதல் 50 விழுக்காடு வரையிலான அறை முன்பதிவுகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

முகநூலில் நாம்