கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சை- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, இந்த நூற்றாண்டில் முதல்முறையாக ஆடிப்போய் இருக்கிறது.

அந்த நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கியது, கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் என்றால் போர் தொடுத்து துவம்சம் செய்திருப்பார்கள். ஆனால் அது கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி என்பதால் என்ன செய்வது என்று குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் 3-ந் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும், முடியுமானால் அதை தேர்தலுக்கு முன்பாக ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி ஒரு பக்கம் நடக்கிறது.

இன்னொரு பக்கம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

பாவம், அமெரிக்க விஞ்ஞானிகள். சரியாக தூங்கக்கூட நேரமின்றி மாய்ந்து மாய்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்போது ஒரு புதிய சிகிச்சை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல, கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சையை இவர்கள் உலகுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது, கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளின் ரத்தத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் ‘ஆன்டிபாடி’களை (நோய் எதிர்ப்பு பொருள்) கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இப்போது கொரோனா பரவத்தொடங்கிய பின்னர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற வார்த்தையாக இந்த ‘ஆன்டிபாடி’ மாறி உள்ளது. இந்த ‘ஆன்டிபாடி’க்கு மற்றொரு பெயர் உண்டு. அது, இம்யுனோகுளோபுலின் என்பதாகும்.

இது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்களால் உருவாக்கப்படுகிற ‘ஒய்’ வடிவ புரதம் ஆகும். இந்த ‘ஒய்’ வடிவ புரதத்தை கொண்டு, பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நோயை உருவாக்குகிற பெளிப்பொருட்களை அடையாளம் கண்டு அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது அப்படியே கொரோனா நோயாளிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை விலங்குகள் மற்றும் மனித செல் வளர்ப்பு பரிசோதனையில் கண்டறிந்து இருக்கிறார்கள்.

இத்தகைய ‘ஆன்டிபாடி’களை ஊசி வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தலாம். இதன்மூலம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அளவு குறையும், நோய் கடுமையாவது தடுக்கப்படும்.

இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஜோல்லா நகரில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த ‘ஆன்டிபாடி’கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கும், வழக்கமான தடுப்பூசி சரியாக பலன் அளிக்காதவர்களுக்கும் நல்ல பலனைத்தரும் என்கிறார்கள் இவர்கள். இந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை நேற்று முன்தினம் ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆராய்ச்சியானது, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆன்டிபாடிகளின் கூடுதல் சோதனைகளுக்கான களத்தை அமைத்து தந்துள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது கொரோனா வைரசுக்கு சாத்தியமான சிகிச்சையாகவும், தடுப்பாகவும் பயன்படுத்த முடியும்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டென்னிஸ் பர்டன் கூறும்போது, “இந்த சக்தி வாய்ந்த ஆன்டிபாடிகளின் கண்டுபிடிப்பு முற்றிலும் புதியவற்றுக்கான விரைவான பதிலளிப்பாக அமையும்” என்று குறிப்பிட்டார்.

சாண்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருந்து துறை பேராசிரியர் தாமஸ் ரோஜர்ஸ் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “இது மகத்தான கூட்டு முயற்சி ஆகும். மருத்துவ பரிசோதனைகளுக்கு நம்பிக்கை அளிக்கிற ஆன்டிபாடிகளை அதிகளவில் தயாரிப்பதற்கு நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்“ என்கிறார்.

கடுமையான கொரோனா வைரசுக்கு ஒரு சிகிச்சை அல்லது தடுப்பூசியை உருவாக்குவதுதான் தற்போது உலகின் முதல் பொது சுகாதார முன்னுரிமை என்று யதார்த்த நிலையையும் இவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த ‘ஆன்டிபாடி’களை உயிரியல் தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஏராளமாக தயாரித்து, கடுமையான நோயைத்தடுக்கும் ஒரு சிகிச்சையாகவும், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியாகவும் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டும் உள்ளனர்.

இதே அணுகுமுறை எபோலா வைரஸ் தொற்று பரவலிலும், நிமோனியாவால் பாதிக்கப்படுகிற சுவாச கோளாறிலும் வெற்றிகரமாக செய்து காட்டப்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மேன்மையை சுட்டிக்காட்டும் ஆதாரமாக அமைகிறது!

முகநூலில் நாம்