
சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால் தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது.
இத்தாலியில் பிப்ரவரி 21-ந்தேதி கொரோனாவால் முதல் மரணம் நடந்தது. படிப்படியாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மட்டும் இத்தாலியில் 133 பேர் பலியாகினர். தொடர்ந்து நேற்று முன்தினம் 97 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 463 ஆக இருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 631-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புதியதாக 977 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளும், பாதிப்புகளும் நீடித்து வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி நாட்டில் 20 மாகாணங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 1½ கோடிக்கும் அதிகமான மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள், மத வழிபாடு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வருகிற 3-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று பிரதமர் சியூசெப்கோண்டே அறிவித்துள்ளார்.
அரசின் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இங்கிலாந்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசால் அந்நாட்டின் சுகாதாரத்துறை பெண் மந்திரியும், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யுமான நடீன் டோரிஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வட அயர்லாந்தில் 16 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மந்திரி நடீன் டோரிசை சந்தித்த நபர்களையும் அழைத்து அவர்களையும் பரிசோதிக்க உள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.