கொரோனா மரணித்தோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இலங்கையில் மேலும் இருவர் இன்று உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் :

கொரோனா 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் இருவரின் (02) மரணம் இடம் பெற்றிருப்பதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 142ஆகும்.

01. சரியாக வதிவிடம் கண்டறியப்படவில்லை. கொழும்பு பிரதேசத்தில் 62 வயதான ஆண் நபர் ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன். அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் 07 திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நிலையாகும்.

 02. கொழும்பு 13 ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 7ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று மற்றும் நீரிழிவுடன் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ,இலங்கையில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை இன்று 24 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளதுடன் இன்றைய தினம் பேலிய கொடை கொத்தணியில் இருந்து 172 பேரும் சிறைச்சாலை கொத்தணியில் இருந்து 154 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்..

தொற்றுக்குள்ளானவர்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை அண்மித்துள்ளது. நேற்றைய தினம்  14 ஆயிரத்து 123 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்