கொரோனா தொடர்பில் பிரதமர் சற்று முன்னர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பொது மக்களிடம் கோரியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 2 நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்காக நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்துல் நிலையங்களிலும், அதற்கு வெளியிலும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இந்த பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தொடர்பில், அதன் தலைவர்கள் பொறுப்புடையவராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணியாளர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக அவதானம் செலுத்தி, நோய் அறிகுறிகள் தென்படுமாயின், அவர்களுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அவர்கள் சேவைக்கு சமூமளிப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

இதேநேரம், பணியாற்றும் இடங்களில் உள்ள பிரிவுகளை இயன்றளவு தனித்தனியாக முன்னெடுப்பதுடன், குறித்த பிரிவுகளை சார்ந்தவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதை தவிர்த்து, பணிக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

முகநூலில் நாம்