
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 196 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் 4 லடத்து 67 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 21 ஆயிரத்து 177 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 986 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீடுகளிலேயே இருக்கும் படியும், வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனாலும், வைரசால் பாதிக்கப்படுபவர்களின் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
”மக்களை வீடுகளுக்குள் இருக்க சொல்வதாலும், மக்கள் கூட்டமாக கூடும் இடங்களை மூடுவதாலும் வைரஸ் பரவுவதில் தாமதம் ஏற்பட்டு கூடுதல் நேரம் மட்டுமே கிடைக்கும். இது மருத்துவத்துறை மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும். ஆனால் இந்த நடவடிக்கைகள் கொரோனா வைரசை அழிக்காது.
வைரஸ் உங்கள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க கிடைத்த முதல் வாய்ப்பை நீங்கள் தவறவிட்ட விட்டுவிட்டீர்கள்.
ஆனால் தற்போது மக்களை வீடுகளிலேயே இருக்க சொல்லி ஊரடங்கை பிறப்பித்து இருப்பதால் வைரசை அழிக்க நீங்கள் இரண்டாவது வாய்ப்பை உருவாக்கியுள்ளீர்கள்.
கேள்வி என்னவென்றால் பொது ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நாடுகளாகிய நீங்கள் இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தப்போகிறீர்கள்?
சமூக மற்றும் பொருளாதார கட்டுபாடுகளுக்கு மத்தியில் வைரஸ் பாதிக்கப்பட்டவரை தீவிரமான நடவடிக்கைகள் மூலம் கண்டுபிடித்தல், தனிமைபடுத்துதல், பரிசோதனை செய்தல், சிகிச்சை அளித்தல் போன்றவை வைரஸ் பரவுவதை தடுக்கும் வேகமான வழிமுறையாகும்.
அதுமட்டுமல்லாமல் வைரஸ் பரவுவதில் இருந்து மக்களை பாதுகாக்கவும் இதுவே சிறந்த நடைமுறையாகும்’’
என அவர் தெரிவித்தார்.