
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரச நிறுவனங்கள் பலவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை கோள் மண்டலம் இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இதனிடையே, பரீட்சைகள் திணைக்களத்தினால் 2020 மார்ச் மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளம் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சைகள் நடாத்தப்படும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒருநாள் சேவையின் கீழ் பரீட்சை பெறுபேறுகளை பெறும் வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும்
இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, வேரஹெர போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் அல்லது ஏனைய போக்குவரத்து திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்கு வருகைதருவது எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு, மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா ஆகிய 11 நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் கொன்சியூலர் அலுவலக சேவைகள் நேற்று (26) முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.