கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடைபெற இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மெல்லமெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

பிப்ரவரி மாதத்தில் இருந்து உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு வீறுகொண்டு பரவியது. தற்போது இந்த வைரசால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இதனால் போட்டியை தள்ளி வைப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதற்கிடையே கனடா, ஆஸ்திரேலியா தங்கள் நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுப்பமாட்டோம் என்று அறிவித்தது. மேலும் பல நாடுகள் இதே முடிவை எடுக்க இருந்தன.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு தள்ளி வைக்கலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதாக ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முகநூலில் நாம்