கைவசமுள்ள காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு அரசாங்கம் மக்களுடன் பேச வரட்டும்- அனந்தி

அரசாங்கம், தங்களுடைய கைவசம் இருக்கின்ற காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு மக்களுடன் பேசுவதற்கு வரவேண்டும் என தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திக்கவுள்ளமை தொடர்பாக அவர்  வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு

குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சந்திக்கவுள்ளதாக பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் போய்க்கொண்டிருக்கின்றது.

ஜனாதியின் பணிப்பின் பேரிலேயே, தான் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

யுத்தம் முடிந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் சர்வதேச நீதியை நாடி நிற்கின்றனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதுவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்ற நிலையில் தற்போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்திக்க அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கிறது.

அப்படியானால், சர்வதேச ரீதியில் நாம் நீதியைத் தேடாமல் உள்நாட்டிலே தீர்க்கக்கூடியதாக காணாமல் போனோரின் உறவுகளைச் சந்தித்துப் பேசுகின்றோம் என்ற ஒரு மாயையை உலகிற்குக் காட்டுவதற்கு இவர்கள் எத்தணிப்பதாக நாங்கள் பார்க்கின்றோம்.

உண்மையில், இறுதிப் போரில் சரணடைந்தவர்களுடைய வெளியிடப்படாத பட்டியலை வெளியிடுவதாக இதே ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் தெரிவித்திருந்ததும், பின்னர் ஒன்றுமே இல்லாத நிலையைக் கொண்டு வந்ததையும் நாங்கள் அறிவோம்.

ஆனால், உள்ளநாட்டுப் பொறிமுறைகள் அத்தனைக்கும் தோற்றியவர்களாக நாங்கள் இருக்கின்ற போது, தற்போது திடீர் கரிசனையை அரசாங்கம் எங்கள் மீது கொள்வதன் நோக்கம் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையில் தங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எதிர்கொள்வதற்கு எங்களுடைய மக்களை ஒரு போலியாகச் சந்திக்கின்ற நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றார்கள். அப்படிச் சந்தித்தாலும்கூட, இவர்கள் இறந்தவர்களுக்கான நட்டஈடு என்ற வழியில்தான் போகப்போகின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே காணாமல் போனோரின் அலுவலகம் கொண்டுவந்து காணாமல்போன ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனாலும், ஒன்றைக் கூறுகின்றோம், இதே ஆட்சியாளர்களின் காலத்தில்தான் பெருமளவான மக்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். சரணடையக் கொடுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன்.

இந்நிலையில், இவர்கள் உடனடியாக இந்தப் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, தங்களுடைய கைவசம் இருக்கின்ற, காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதன்பின்னர், மக்களுடன் பேசுவதற்கு வரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்