கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுங்கள்

இருபத்தைந்து வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக
தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச
வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கம் என்ற அமைப்பின்
பிரதிநிதி, யாழ் ஊடக அமையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

1996 ஆம் ஆண்டு சர்வோதய இயக்கத்தில் எனது சகோதரன் பணியாற்றியபோது
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டார். அவரைப்போல 600
பேர் வரை கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இதற்காக கைது
செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கம் என்ற அமைப்பை
உருவாக்கி செயல்பட்டோம்.

1997 ஆம் ஆண்டில் அப்போது இருந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை
அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினோம். ஆறு மாதங்களுக்குள் தீர்வு
தருவதாக கூறியிருந்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு
பலாலி படைத் தளத்தில் இடம்பெற்ற செய்மதிக் கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன்
பேசியும் பலன் கிடைக்கவில்லை. சாத்வீகமாக பல்வேறு வழிகளிலும் நாம்
அப்பாவி இளைஞர்கள் மற்றும் சகோதரர்களின் விடுதலைக்காக  போராடினோம்.

கடந்த இருபது வருடங்களாக காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கல்வி
பொருளாதாரம் என பலவற்றிலும் நலிவுற்றுப் போனோம். எத்தனையோ
ஆணைக்குழுக்களுக்கு முன்னாள் எமது சாட்சியங்களை வழங்கி இருந்தோம்.

நாம் அரசுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை. சாத்வீகமாகவே
எமது பிள்ளைகள் சகோதரர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோருகிறோம்.

எங்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட   ஏமாற்றம்,சலிப்பு
போன்றவற்றினால்  தற்போது எவ்வித போராட்டங்களிலும் நாம் பங்கேற்பது
கிடையாது. எமது நிலைமை தொடர்பாகவோ எமது பிரச்சினைகள் தொடர்பாகவோ தமிழ்
கட்சிகள் எதுவுமே பேசுவதும் கிடையாது. யுத்தத்திற்கு பின்னர் அல்ல . 1996
ஆம் ஆண்டுக்கு பின்னர் 25 வருடங்களாக நாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக
போராடி வருகின்றோம். இதனை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் தலைவர்கள் கைது
செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்
என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்