
தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது
இலட்சியம் இல்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக
போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (புதன்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக
இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும்
நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத
முறையாக இருக்கிறது.மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது.அந்த
வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக
உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலை சந்திக்க
வேண்டி உள்ளது.ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்பது எமது நோக்கம் என அவர்
மேலும் தெரிவித்தார்